தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹூமோ டயாலிசிஸை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதா? டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு! - TNGDA

சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஹூமோ டயாலிசிஸ் முறையை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க அரசு முயன்று வருவதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.

ரவீந்திரநாத் -கோப்புப்படம்
ரவீந்திரநாத் -கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2024, 8:56 PM IST

சென்னை:தமிழ்நாடு மருத்துவத் துறை ஏழை - எளிய, மத்திய தரக் குடும்பங்களைச் சேர்ந்த, சிறு நீரக நோயாளிகளை கடுமையாகப் பாதிக்கும் வகையில் ஹீமோ டயாலிசிஸ் (Haemodialysis) என்ற இரத்த சுத்திகரிப்பு திட்டத்தை பொது தனியார் பங்களிப்பு (Public Private Partnership ) என்ற பெயரில் , கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க உள்ளதாக டாக்டர்கள் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.

தேசிய நல்வாழ்வு இயக்கம் தமிழ்நாட்டின் சார்பில் ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்வதற்கான புதிய கொள்கையை உருவாக்குவதற்கான குழுவை அமைத்துள்ளது. அந்தக்குழுவின் கூட்டம் நடத்தப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட உள்ளது. இந்த நிலையில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம் (National Health Mission) என்பது,பொது சுகாதாரத்துறையை ஒழித்துக் கட்டும் இயக்கமாகும்.

மருத்துவத்தை முற்றிலும் தனியார் மயமாக்கும் திட்டமாகும். இந்திய மருத்துவத் துறையை, மருத்துவக் காப்பீட்டை அடிப்படையாகக் கொண்டதாக அமெரிக்க பாணியில் மாற்றும் திட்டமாகும். இது ஏழை எளிய மக்களின் நலன்களுக்கு எதிரான திட்டமாகும். இதை நீண்ட காலமாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கூறி வருகிறது.

இத்தகைய போக்கை எதிர்த்துப் போராடியும் வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவத் துறையை திராவிட மாடல் மருத்துவத்துறை எனக் கூறிக் கொள்ளும், தமிழ்நாடு அரசும், இத்திட்டத்தை மாநில உரிமைகளுக்கு எதிராக, தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்பொழுது அத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஏழை - எளிய,மத்திய தரக் குடும்பங்களைச் சேர்ந்த, சிறு நீரக நோயாளிகளை கடுமையாகப் பாதிக்கும் வகையில் ஹீமோ டயாலிசிஸ் ( Haemodialysis ) என்ற இரத்த சுத்திகரிப்பு திட்டத்தை பொது தனியார் பங்களிப்பு ( Public Private Partnership ) என்ற பெயரில் ,கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க உள்ளது.

மருத்துவக் காப்பீட்டின் மூலம் அல்லது கட்டணம் செலுத்துவது மூலம் ஹீமோ டயாலிசிஸ் செய்து கொள்ளும் முறையை கொண்டுவருகிறது. இது ஏழை - எளிய, மத்தியத் தரக் குடும்ப சிறு நீரக நோயாளிகளை கடுமையாக பாதிக்கும். அவர்களின் நலன்களை,சிகிச்சைகளை ,கார்ப்பரேட்டுகளிடம் விட்டு விடுவது சிறிதும் நியாயமல்ல.

பல்வேறு துறைகளில் மாநில உரிமைகளை பறிக்கின்ற மத்திய அரசை தமிழ்நாடு அரசு கண்டிக்கிறது.கடுமையாக எதிர்த்துப் போராடுகிறது.இது வரவேற்பிற்குரியது. ஆனால், மருத்துவத் துறையில் தேசிய நல்வாழ்வுக்குழுமம் மூலம் மாநில உரிமைகள் பறிக்கப் படுவதை ,தமிழ்நாடு அரசு அனுமதிக்கிறது அல்லது மௌனம் காக்கிறது. இது சரியல்ல.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் எய்ட்ஸ் பரவுவதற்கு காரணம் என்ன? விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டு மக்களின் நலவாழ்வு உரிமைகளுக்கு நல்லதல்ல. ஹீமோ டயாலிசிஸ் திட்டத்தை தனியார் பொது பங்களிப்பு மாடலுக்கு வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசு கூறும் எந்தக் காரணமும் ஏற்புடையதல்ல. எனவே,தமிழ்நாடு அரசு ,ஹீமோ டயாலிசிஸ் திட்டத்தை PPP மாடல் என்ற பெயரில் தனியாருக்கு வழங்குவதை கைவிட வேண்டும்.

அரசு மருத்துவமனைகள் மூலம் முற்றிலும் இலவசமாக, ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சையை வழங்கிட வேண்டும்.அதற்கான டெக்னீசியன்கள், பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும். பொதுச் சுகாதாரத் துறையை வலுப்படுத்திட வேண்டும். ஏழை - எளிய நோயாளிகளின் நலன்களை காத்திட வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details