சென்னை:சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கள்ளக்குறிச்சி சம்பவம் எதிர்பாராது நடந்த ஒன்று. இதில் கடந்த ஆட்சியில் நடைபெற்றது போல இல்லாமல் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிமுக, பாஜகவிற்கு தொடர்பு: இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி ஆதாயம் தேடுவதற்கு தவறான கண்ணோட்டத்தில் அணுகுகிறார்கள். இதில் அவர்களுக்கு அக்கறை இருக்குமானால் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பாஜக, அதிமுகவை சார்ந்தவர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவலாக வந்து கொண்டிருக்கிறது. இதில் உண்மை நிச்சயமாக வெளிவரும்.
இதையெல்லாம் தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சிக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் ஏதோ மூடி மறைப்பதற்கு அல்ல. இதை சட்டமன்றத்திலேயே விவாதிக்கலாம் என முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தார். ஆனால் கேள்வி கேட்பதற்குகூட வராமல் நாடகமாடி விட்டு சென்றுவிட்டார்.
சாராயம் எப்போது வந்தது என்ற வரலாறு நிர்மலா சீதாராமனுக்கு தெரியுமா? 1971-ல் கலாச்சாராயம் ஆறாக ஓடியது. தமிழ்நாட்டிற்கு அருகில் உள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகத்தில் மதுவிலக்கு இல்லை. ஆகவே தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தவில்லை. 1971லிருந்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க திமுகவின் பொதுக்குழுவை கூட்டி மதுவிலக்குக்காக மதுக்கடைகளை அரசே நடத்தலாம் என முன்மொழிந்தவர் மறைந்த எம்ஜிஆர். நிர்மலா சீதாராமன் திமுக மீது குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக பேசுகிறார்.
1972ல் திமுகவிலிருந்து பிரிந்து 1973 இடைத்தேர்தலின்போது எம்ஜிஆர் பொதுக்குழுவில் ஆதரித்து தீர்மானத்தை நிறைவேற்றினாரோ அதையே கலங்கப்படுத்தி பேசி வெற்றி பெற்றுவிட்டார். 1972 இல் திறக்கப்பட்ட மதுக்கடைகள் 1973 திமுக ஆட்சியில் மூடப்பட்டது. ஆனால் இது திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. நிர்மலா சீதாராமன், எடப்பாடி பழனிசாமி போன்றோர் முழு பூசணிக்கையை சோற்றில் மறைக்கிறார்கள்.
எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் தடை செய்யப்பட்ட குட்கா விவகாரத்தில் அன்றைக்கு அமைச்சராக இருந்தவர்களுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பது குறித்து கைப்பற்றப்பட்ட டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ இயக்குனரிடம், நானும் டிகேஎஸ் இளங்கோவனும் நேரில் சென்று புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரத்தை திசை திருப்பவே சிபிஐ விசாரணை கேட்கிறார்கள். கள்ளக்குறிச்சி தொகுதியில் மூன்று ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் செந்தில்நாதனுக்கு கள்ளச்சாராயம் விற்றது தெரியாதா?. சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியும் என ஒத்துக் கொள்கிறார். ஆனால் காவல்துறை, பத்திரிகைகள், முதலமைச்சரிடமோ அந்த சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தாரா? ஏன் அப்படி செய்யவில்லை. அவருக்கு தெரியும் அவரும் இதற்கு உடந்தை தானே? அப்படி தெரிவித்திருந்தால் முதலமைச்சரின் கவனத்திற்கு வந்திருக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பார்.