சென்னை: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 3,000 பேர் இன்று (ஜன.24) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு திமுகவின் மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ராஜீவ் காந்தி கூறியதாவது;
''நாம் தமிழர் கட்சியை கட்டமைக்கும் போது இயக்குனர் மணிவண்ணன் மற்றும் பெரியாரியவாதிகள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை காரணம் காட்டி ஒரு மாற்று அரசியல் வர வேண்டும் என்று நம்பினார்கள். தொடக்க காலத்தில் இருந்தவர்கள் அனைவரும் சீமானைத் தவிர மற்ற அனைவரும் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர்.
ராஜீவ் காந்தி பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu) கொம்பனுக்கு கொம்பன்
இன்று 8 மாவட்ட செயலாளர்கள், 2 மண்டல செயலாளர்கள், ஒரு மாநில ஒருங்கிணைப்பாளர், 6 சட்டமன்ற வேட்பாளர்கள், 2 பாராளுமன்ற வேட்பாளர்கள் இங்கே வந்திருக்கின்றனர். இந்த இடம் பத்தாது என்பதற்காக நாங்கள் அனைவரையும் அழைக்கவில்லை; கண்டிப்பாக ஒரு மாநாடு வைத்து அனைவரையும் வர வைப்போம்.
பெரியார் மீது கருத்தியல் விமர்சனங்கள் வைக்கலாம். ஆனால், ஆதாரமற்ற தரவுகளை வைத்து கொச்சைப்படுத்துகிற போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதை அப்பனுக்கு அப்பன் கொம்பனுக்கு கொம்பன் யார் செய்தாலும் இயக்கரீதியாக, முட்டுக்கு எதிர் முட்டு தான்.
எடப்பாடி பழனிசாமி பக்கம் நின்று சர்க்கஸ் காட்டிய சீமான் இப்போது குருமூர்த்தி மற்றும் ஆர்எஸ்எஸ் தோளில் நின்று சர்க்கஸ் காட்டிக் கொண்டிருக்கிறார். நடிகர் ரஜினியை சந்தித்த பிறகு ஆர்எஸ்எஸ்-ஐ சீமான் வெளிப்படையாக ஆதரிக்க ஆரம்பித்து விட்டார். கருத்து முரணைகருத்து முரணாக எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பிரபாகரனுடன் புகைப்படம்
வெங்காயம் திரைப்படத்தின் இயக்குனர் தற்போது ஒரு ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். செங்கோட்டையன் என்பவர் ஹார்ட் டிஸ்க் கொண்டு வந்து கொடுத்த போது தம்பி கொரியர் வந்திருக்கிறதா என்று வேகமாக வாங்கிய அப்பாவி ராஜீவ் காந்தி நான் தான். உள்ளே திறந்து பார்த்தால் தான் தெரிகிறது அவர் படம் எடுத்துப் பிழைக்க பரமக்குடி ராமநாதபுரத்தில் இருந்து வந்தவர் அல்ல. அது ஒட்டி வெட்டிய படங்கள் என்று. ஆதாரத்தை நாங்கள் கொடுத்து விட்டோம். எடிட் செய்தவரும் சொல்லிவிட்டார். அந்த ஹார்ட் டிஸ்கை வாங்கிய நானும் சொல்லிவிட்டேன். அதை கொண்டு வந்த செங்கோட்டையனும் தற்போது இல்லை.
ஒரே வீட்டு பிள்ளை
தமிழகத்தில் தேர்தல் களத்தில் ஒரு கவுன்சிலர் வாங்க முடியுமா? தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் முதல் ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன். தம்பி ஒருவர் கன்னியாகுமரியில் வெற்றி பெற்றார். இவர்களும் இங்கு வந்துள்ளனர். ஒரே வீட்டு பிள்ளையாக இருக்கக்கூடிய நம் மொழியிலிருந்து பிறந்திருக்கக்கூடிய மொழி பேசக்கூடிய மக்களை வந்தேறிகள் என்று பேசுவது என்பது பாசிசக் கோட்பாடு. ஆர்எஸ்எஸிலிருந்து அவருக்கு ஓட்டு வரவேண்டும் என்பதற்காக அவர் (சீமான்) வேலை செய்கிறார்.
அங்கீகாரத்தை வாங்கிக் கொடுத்தவர் விஜய்
தற்போது மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை வாங்கிக் கொடுத்தவர் விஜய் தான். சீமானுக்கு வெறும் 4.8 விழுக்காடு தான் இருந்தது. விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறி விட்டார். ஆனால், தேர்தலில் போட்டியிட அவர் வரவில்லை. அவரும் சீமானும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று தவறான தகவல்கள் வெளியே வந்தன. அதை அடிப்படையாக வைத்துக் கொண்டு பத்திரிக்கையில் அண்ணன் தம்பி என்று பேசியவுடன் விஜயின் ஆதரவாளர்கள் சீமானுக்கு ஓட்டு போட்டார்கள். 2026 இல் சீமான் டெபாசிட்டை இழப்பார்.
வெறும் பேச்சுக்காக ஒரு மாவீரனை சமையல்காரர் ஆக மாற்றி வைத்திருக்கிறார். பிரபாகரன் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் என்றைக்கும் தமிழ்நாட்டில் சீமானுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறியதில்லை. பிரபாகரனை 2008-ல் சீமான் சந்தித்தது உண்மை தான் பரவாயில்லை. புகைப்படம் தான் போலி. துப்பாக்கி வைத்திருந்ததும் போலி தான்'' என்று ராஜீவ் காந்தி கூறினார்.