ஈரோடு: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் தெருமுனை பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோட்டில் தி.மு.க. சார்பில், 'எல்லோருக்கும் எல்லாம்’ என்ற தலைப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில், திமுக மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்பி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது, “ தமிழக மக்களின் தந்தையாக உள்ள பெரியார் மண்ணில் பேசுவது பெருமை. அரசியலை மதத்தோடு இணைத்து மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்களோ, அவர்களுக்கு தந்தை பெரியார் சிம்ம சொப்பனமாக உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்கள் கல்லூரி படிப்பை படிக்க, அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் புதுமைபெண் திட்டம் கொண்டு வந்தார்.
ஒன்றியத்தில் உள்ள ஆட்சி மதத்தை வைத்து ஒருவருக்கொருவர் வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி என்று விரோதத்தை தொடர்ந்து உருவாக்கி, அரசியல் செய்து வருகிறார்கள். இது மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மணிப்பூரில் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இன்று வரை நீதி கிடைக்க வில்லை. அதற்கு பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் செல்லவில்லை. ஆனால், தற்போது தமிழகத்திற்கு வருவதற்கு அவருக்கு நேரம் உள்ளது. இதற்கு காரணம் தேர்தல்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே குடியேறினாலும் அவருக்கு வாக்குகள் கிடைக்காது. திமுகவை பார்த்து மத விரோதிகள் என்று கூறுகின்றனர். ஒவ்வொருக்கும் மதம் சார்ந்த நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் இந்துகளாக உள்ளனர். இதில், ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிம் இடஒதுக்கீட்டுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், திமுக தமிழக மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்கு தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்தால், மாணவர்கள் படிக்க கூடாது என்ற வகையில் நீட் போன்ற நுழைவு தேர்வு கொண்டு வந்துள்ளனர்.