சென்னை: நவின இந்தியாவின் பொருளாதார மேதை என்று அழைக்கப்படும், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நேற்று (டிசம்பர் 26) வியாழக்கிழமை இரவு காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அவரது மறைவுக்காக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், இன்று நடைபெறவிருந்த அனைத்து அரசு அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுள்ளார். அதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மிகப்பெரிய ஜனநாயகவாதி. அவையின் மீதும், நாடாளுமன்றத்தின் மீதும் அளவுக்கு அதிகமான மரியாதையை வைத்து பிரதமராக பணியாற்றியவர்.
இதையும் படிங்க:Manmohan Singh: பொருளாதார மேதை மறைவு.. "இந்தியாவிற்கு ஈடுகட்ட முடியாத இழப்பு" - அரசியல் தலைவர்கள் உருக்கம்!
உலகப் பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்த போதும், இந்திய பொருளாதாரத்தை நிலை நிறுத்தி காப்பாற்றியவர். மிகப்பெரிய பொருளாதார நிபுணராக இருந்த அவரது மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
அதனைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளார், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மிக அற்புதமான மனிதர். பொருளாதார நிபுணரான அவரது இறப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன்” என்றார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று மாலை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.