சென்னை:2024 நாடளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரைப்படி இக்குழு பிப்ரவரி 5 ஆம் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளை பெறும் பணியை தொடங்கி உள்ளது.
’உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ -’நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள்’ என்ற தலைப்பில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு வருகிறது. அதன் படி பிப்ரவரி 5 ஆம் தேதி தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்ட மக்களை சந்தித்து அவர்கள் வழங்கிய பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து பிப்ரவரி 6 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள், பிப்ரவரி 7 ஆம் தேதி மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், பிப்ரவரி 9 ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள், பிப்ரவரி 10 ஆம் தேதி காலையில் கோவை, நீலகிரி, பிற்பகலில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர்.
இந்த நிலையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று (பிப்.11) சேலம் மாவட்டத்தில் மக்களை சந்தித்தனர். சேலத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்த பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றனர்.
இதில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள்,கால்நடை சந்தை வியாபாரிகள், கொலுசு உற்பத்தியாளர் சங்கங்கள், லாரி உரிமையாளர்கள், வணிகர் சங்கங்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், மக்கள் நலச்சங்கங்கள், தொழில் முனைவோர், பல்வேறு அமைப்புகளைச்சேர்ந்தவர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்த பரிந்துரையை ஆர்வமுடன் வழங்கினர்.
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சேலம் மாவட்ட திமுகவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த குழுவினரிடம் பொதுமக்கள் வழங்கப்பட்டுல் சில முக்கிய பரிந்துரைகள்.
- நான்கு வழிச்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு தனி பாதை அமைக்க வேண்டும்.
- ஹிட் & ரன் சட்டத்தை அமல்படுத்தினால் மோட்டார் தொழில் ஸ்தம்பித்துவிடும். சட்டத்தை அகில இந்திய அளவில் அமல்படுத்தக்கூடாது.
- சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து பன்னாட்டு விமான சேவைகள் வழங்க வேண்டும்.
- சேலம் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயரை சூட்ட வேண்டும்.
- தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்
இதையும் படிங்க :"ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது" - அமைச்சர் சிவசங்கர்!