சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ளதால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணியினை துவங்கி உள்ளன. இதில் திமுகவைப் பொறுத்தவரைம் கூட்டணி பேச்சு வார்த்தை என்பது ஏற்கனவே முடிந்துள்ள நிலையில், தற்போது தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, திமுகவின் தேர்தல் பணிக்குழு நடத்தும் மாவட்ட வாரியான ஆலோசனைக் கூட்டமானது, இன்று (பிப்.01) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர். அதிலும், குறிப்பாக அமைச்சர் உதயநிதிக்கும் இந்த தேர்தல் பணிக்குழுவில் முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தேர்விலும், அமைச்சர் உதயநிதியின் பங்கு அதிக அளவில் இருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அவர் தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் இளைஞர் அணியின் முக்கிய பொறுப்பாளர்களை, குறிப்பிட்ட சில தொகுதிகளில் தேர்தல் பணியினை தொடங்க அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக, தேர்தல் பணிக்குழு சார்பில் தேர்தல் பணிகள் தொடர்பாக நடைபெற்று வரக்கூடிய கட்சியின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி தவறாமல் பங்கேற்று வருகிறார்.
தற்பொழுது, தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப் பயணத்தில் உள்ளதாலும், அவர் வருகின்ற பிப்ரவரி 7-ஆம் தேதி தமிழகம் திரும்ப உள்ளதாலும், அவர் வருவதற்கு முன்னதாக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை பெரும்பாலும் முடித்துவிட்டு, பிப்ரவரி 9-ஆம் தேதி காங்கிரஸ் உடன் தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என விரைவில் அறிவிக்கவும் திமுக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ராமர் கோயில் கட்டியதால் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க முடியாது - கே.எஸ்.அழகிரி விமர்சனம்!