சென்னை: தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (ஜூன் 8) மாலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிதாக வெற்றி பெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில்,
தீர்மானம் 1:இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றியை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கும் - வெற்றிக்கு வழிநடத்திய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
- ஜனநாயகத்தைக் காக்கும் இந்த மாபெரும் போரில், உணர்வு பூர்வமாக ஒருங்கிணைந்து வாக்களித்து தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளை 40 இடங்களிலும் வெற்றி பெற வைத்த தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்களுக்கு இக்கூட்டம் இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
- தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க.வின் சர்வாதிகார - ஜனநாயக விரோத ஆட்சிக்குத் தக்க பாடம் புகட்டிட - தி.மு.க தலைமையிலான 'இந்தியா’ கூட்டணி சார்பில் “நாற்பதுக்கு நாற்பது” என்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல் முழக்கத்தை முன்வைத்து, தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு தன்னுடைய ஆட்சியின் மூலம் வழங்கியுள்ள நல்ல பல திட்டங்களுக்காக 221 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு அதிக வாக்குளை வழங்கி, மகத்தான, வரலாற்று சிறப்புமிக்க, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியையும், மனமுவந்த பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
- பா.ஜ.க. அரசின் அனைத்து விதமான அடக்குமுறைகளையும் மீறி கன்னியாகுமரியில் துவங்கிய நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி காஷ்மீர் வரை பரவி, இன்றைக்கு இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி, கூட்டாட்சிக் கருத்தியல், அரசியல் சட்டம் ஆகிய அனைத்தின் மீதான தாக்குதலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றால், அதற்கான முழுப் பெருமையும், அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பை நல்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சாரும் என்பதை இந்தக் கூட்டம் உவகையுடன் - உற்சாகத்துடன், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்க உணர்வுடன் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறது.
தீர்மானம் 2: வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியையொட்டி கோவையில் முப்பெரும் விழா
- “நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியைப் பெற்று, கருணாநிதி காலடியில் காணிக்கை ஆக்குவோம்” என்று திமுக தலைவர் உறுதியேற்றார்கள். அந்த உறுதியைச் செயல்படுத்திக் காட்டி விட்டார்கள்.
- அதன்படி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெற்ற வெற்றிக்குத் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, இந்தியாவே வியந்து பார்க்கும் இந்த வெற்றிக்கு நம்மை அழைத்துச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா - ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக வருகிற ஜூன் 14-ஆம் தேதியன்று கோவையில் கொண்டாடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3:நாடாளுமன்ற வளாகத்தில் அகற்றப்பட்ட தேசத் தலைவர்கள் சிலைகளை அதே இடத்தில் வைத்திடுக!
- சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம், மனித நேயம் ஆகியவற்றின் பிறப்பிடமாக விளங்கிய இந்தியாவில் வெறுப்பு, பிளவு மனப்பான்மைகளை விதைத்து, மதவெறியைத் தூண்டி, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து விடலாம் என்று “ஒரே ஒரே” என்ற ஒற்றை நோக்கோடு ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டது. மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாடு உள்ளிட்ட - குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தியது. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட ஒன்றிய ஏஜென்சிகளை எதிர்கட்சிகளைப் பழிவாங்குவதற்கு என்றே களமிறக்கி, அந்த அமைப்புகளின் நடுவுநிலைமையை மட்டுமின்றி, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரத்தையும் கேள்விக்குறியாக்கியது.
- நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசியல்சட்ட அமைப்புகளை முடக்கிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இனிமேலும் இதுபோன்ற “ஆபத்தான விளையாட்டுகளை” நடத்தாமல் இருக்கவே மக்கள் வலிமையான எதிர்க்கட்சிகள் அடங்கிய நாடாளுமன்றத்தை இந்தத் தேர்தல் வாயிலாக உருவாக்கியிருக்கிறார்கள். தான் நினைத்ததைச் செய்ய முடியாத அரசியல் நெருக்கடிக்குள் பா.ஜ.க. தள்ளப்பட்டுள்ளது. இதுவே இந்தியா கூட்டணியின் முதல் வெற்றியாகும். இந்திய ஜனநாயகத்தையும் நாடாளுமன்ற - அரசியல்சட்ட விழுமியங்களையும் சிதைக்க நினைத்த பா.ஜ.க., சிக்கலுக்கு ஆளாகி இருப்பதுதான் இந்த தேர்தலின் மாபெரும் வெற்றியாகும்.
- தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளை ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக நாடாளுமன்றத்தில் தேர்வு செய்து அமர்த்தியிருக்கிறார்கள் இந்திய நாட்டு மக்கள். அந்த மக்களின் உணர்வுகளை நிலைநாட்டிடும் வகையில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் செயல்பட்டு, நாட்டின் அரசியல்சட்டத்தைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பினை திமுக, இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து எடுத்துக் கொள்கிறது என்பதை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பிரகடனம் செய்கிறது.
- நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருந்த தேசப்பிதா மகாத்மா காந்தி, பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் சிலைகளை அகற்றிய பிரதமர் மோடி அரசுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ளும் இக்கூட்டம், உடனடியாக அந்த தேசத் தலைவர்களின் சிலைகளை இருந்து இடத்திலேயே வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.