சென்னை:நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1-ம் தேதியும், அதனைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாளை (மே 30) பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார். இவ்வாறு குமரிக்கு வரும் பிரதமர் மோடி, அங்கு உள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்குச் சென்று தியானத்தில் ஈடுபட உள்ளார்.
இந்த நிலையில், மோடியின் இந்த பயணம் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகக் கூறும் திமுக மற்றும் சிபிஐ(எம்), இப்பயணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எம்.ஜோசப் ராஜ் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, பாஜக என்ற அரசியல் கட்சி சார்பில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, 2024 மே 30, 31 ஆகிய தேதிகளில் பாஜக கட்சி வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கில் வாக்காளர்களைக் கவருவதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் தியானம் செய்து விளம்பரப்படுத்த அனுமதித்திருப்பது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.
இதுமட்டுமல்லாமல், இது போன்ற தேவையற்ற விளம்பர யுக்திகளால் பொதுமக்களுக்கும், அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, நரேந்திர மோடிக்கு வழங்கியிருக்கும் அனுமதியை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை ரத்து செய்யுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் மோடியின் குமரி தியானத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இறுதி பரப்புரை முடிந்து, மே 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை புரிந்து, அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாட்கள் தியானம் செய்வதென நரேந்திர மோடி திட்டமிட்டிருக்கிறார்.
இறுதிகட்ட தேர்தல் நடைபெற இருக்கிற 57 மக்களவைத் தொகுதிகளில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய பிரதமர் மோடி தேர்வு செய்திருப்பதைவிட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. பதவிக்காக நரேந்திர மோடி எவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்கும் செல்வார் என்பதற்கு இந்தத் ‘தியான நாடகம்” ஒரு உதாரணமாகும்.
குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திரமோடி இருந்தபோது ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பகிரங்கமாக படுகொலை செய்யப்பட்டபோது, ரோம் நகர் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப்போல கண்டும் காணாமல் இருந்தவர் தான் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி. இளமை காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து, மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் கோல்வால்கரின் சிந்தனைத் தொகுப்புகளைப் படித்து வளர்ந்த நரேந்திர மோடியால் சுவாமி விவேகானந்தரின் உரைகளைப் படித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே படித்திருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிற மனநிலை அவருக்கு இருந்திருக்காது.