கோவை தெற்கு பாஜக வைத்துள்ள பெட்டியின் பின்னணி என்ன கோயம்புத்தூர்: பொள்ளாச்சி வெங்கடேச காலனியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற 'உங்கள் விருப்பம் எங்கள் உத்தரவாதம்' என பெயர் பொருத்தப்பட்ட பெட்டி அறிமுகக் கூட்டம், கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் வசந்த ராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய பாஜக கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் வசந்த ராஜன், "பொள்ளாச்சி நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக நிர்வாகிகள் மூலம் அப்பகுதிகளில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் இப்பெட்டியில் மனுக்கள் அளிக்கலாம். பெட்டி மூலம் அளிக்கப்படும் மனுக்கள், தேர்தல் வாக்குறுதிகளாக சேர்த்துக் கொள்ளப்படுகிறது. பாஜக மூலம் தமிழ்நாடு முழுவதும் 'உங்கள் விருப்பம் எங்கள் உத்தரவாதம்' என்ற பெயரில் புகார் பெட்டி அனைத்து பகுதிகளிலும் வைக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக பொதுமக்கள் மனுக்கள் ஆனைமலை திட்டம், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கோவையிலிருந்து அனைத்து பகுதிகளுக்கும் ரயில் சேவை, நாச்சிபாளையத்தில் தக்காளி உலர் வைத்தல் என பல்வேறு கோரிக்கைகள் மனுக்களாக எங்களிடம் அளித்துள்ளனர்.
திமுக தேர்தலுக்கு வைத்த பெட்டிகளில், பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றி உள்ளனர். திமுகவினர் நீட் தேர்வு விலக்கு, மது ஆலைகள் மூடல் எனக்கூறி, எஃப் எல் 2 என்ற பெயரில் புதிய மது ஆலைகளை திறந்து வருகிறது. பாஜக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்பார்” எனத் தெரிவித்துள்ளார். இதில் மந்திராச்சலம், வழக்கறிஞர் துரை, இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:கோவை அப்துல் கலாம் கனவு சிறப்பு பள்ளி; பேராசிரியர் ஜெயபிரபாவின் ஊக்கமளிக்கும் செயல்!