சென்னை:மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.'மதச்சார்பின்மை மற்றும் ஒற்றுமை காப்போம்' என்று பொதுமக்களுக்கு மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்எல், மநீம, மமக, கொமதேக, தவாக மற்றும் திராவிடர் கழகம் சார்பில் இன்று கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மத நல்லிணக்கத்திற்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டுகளில் ஒன்று தமிழ்நாடாகும்.
தமிழ்நாட்டின் ஆன்மீகத் தலங்களான பழனியாண்டவர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட இந்துமத திருத்தலங்கள், அன்னை வேளாங்கண்ணி ஆலயம், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா போன்ற அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் மத வேறுபாடு இன்றி பொதுமக்கள் வழிபடுவதே இதற்கு சான்று.இத்தகைய தமிழ்நாட்டில் மத வேறுபாடுகளை விதைத்து மக்களைப் பிரித்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு சில அமைப்புகள் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடுவதை பாஜகவும் அதன் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் திட்டமிட்டு செய்து வருவது வழக்கமாகி இருக்கிறது. பாபர் மசூதி, அஜ்மீர் தர்கா என வரிசையாக இத்தகைய பிளவுவாத அரசியலைச் செய்து வருகின்றனர். அவர்களின் அடுத்த குறி தமிழ்நாடாக இருக்கிறது.
தமிழ்நாட்டிலும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சிறு சிறு வலதுசாரி அமைப்புகள் பாஜகவின் ஆதரவில் முளைவிட்டு வளரத் தொடங்கியிருந்தன. கடந்த மூன்றாண்டுகளாக அடங்கியிருந்தவர்கள் தேர்தலை கவனத்தில் கொண்டு தங்களின் பிளவுவாத அரசியலை தொடங்கியிருக்கின்றனர். பாரதிய ஜனதாவின் தேர்தல் அறுவடைக்காக தமிழ்நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்திட திட்டமிட்டு சதிகளை அரங்கேற்றி வருகின்றன.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி தற்போது தனது அடுத்தகட்ட மதவெறித் திட்டத்தை பாஜகவும், அதன் சங்பரிவார அமைப்புகளும் அரங்கேற்றியுள்ளன. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கிறது. திருப்பரங்குன்றம் மலைஅடிவாரத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும், மலையின் தென்புறம் காசி விஸ்வநாதர் கோயிலும், கீழ்புறம் உச்சிப்பிள்ளையார் கோயிலும் அமைந்துள்ளன.
இதையும் படிங்க: 'இருநூறு இலக்கு! தொடங்கி வைத்த ஈரோடு கிழக்கு!' - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் உற்சாக கடிதம்!
2000 ஆண்டுகளுக்கு முன்பாக சமணம் இருந்திருக்கிறது. திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா அமைந்துள்ளது. இங்கு நீண்ட காலமாக மக்கள் எவ்வித பிரச்சனையுமின்றி வழிபாடு செய்து வருகின்றனர்.