சேலம் :தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சேலத்தில் இன்று ( டிச 14) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் நெசவாளர்களின் நிலைமை ஐசியு-வில் உள்ளது. ஜவுளி போன்ற நலிந்த தொழில்கள் மீது ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும். இது குறித்து போராட்டம் நடத்த உள்ளோம்.
தமிழகம் முழுவதும் மழை வெள்ள பாதிப்புகள் அதிகமாக உள்ளது. பாதிப்பிலிருந்து மக்களை மீட்க தொலைநோக்கு பார்வையோடு அரசு அணுகி இருக்க வேண்டும். ஆனால் திட்டமிடல் சரியாக இல்லாததால் பொதுமக்கள் தற்போது அத்தியாவசியப் பொருட்கள் கூட இல்லாமல் சொந்த ஊரிலேயே அகதியாக உள்ளனர்.
அதேபோல் மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசும் உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் மற்றும் மக்களிடம் வாங்கிய வரிப்பணங்கள் எங்கே போனது? கனமழையை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக செய்யவில்லை. டிசம்பர் என்றாலே மழை காலம். அதை தான் கேப்டன் ’டிசம்பர் என்றால் டேஞ்சர்’ என்று கூறுவார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சமாளிப்போம் என்று வாய்சவடால் விடுவதைத் தவிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டில் இறங்க வேண்டும். பாண்டிச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கும் போது, தமிழகத்தில் ரூ.2000 கொடுப்பது போதாது. தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
இதையும் படிங்க: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: தவெக விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்! - EVKS ELANGOVAN
மேலும், மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவரும் கேப்டன் போன்று சிறந்த அரசியல்வாதி. ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளனர். இந்த மசோதா அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டால் தான் வரவேற்க முடியும்.
இந்தியாவில் 140 கோடி மக்கள் உள்ளோம். அவர்கள் அனைவருக்கும் ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற முடிவு எடுப்பது குறித்து ஒரே வார்த்தையில் பதிலளிக்க முடியாது” என்றார். இதையடுத்து, தவெகவுடன் தேமுதிக கூட்டணி அமையுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, முதலில் விஜய் மக்களையும், செய்தியாளர்களையும் சந்திக்கட்டும், தன்னை நிரூபிக்கட்டும். அதன் பிறகு, கூட்டணி குறித்து பார்க்கலாம்” என்றார்.