சென்னை:நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் மக்கள் அனைவரும் இன்று காலையிலேயே புத்தாடை அணிந்து, இல்லங்களில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் தித்திக்கும் தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி இந்து பண்டிகையாக அறியப்பட்டாலும், அனைத்து தரப்பு மக்களாலும் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் பணியாற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை குடும்பத்தோடு கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அதுபோல, சென்னை வாசிகளும் குடும்பத்தோடு தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அதிலும், சென்னையில், பல தரப்பு மக்கள் ஒரே இடத்தில் வசிக்கும் பகுதிகளில் தீபாவளி போன்ற பண்டிகைகள் பாரபட்சம் இன்றி அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து இனிப்பு, பலகாரங்களை பகிர்ந்து கொண்டாடப்படுவதும் உண்டு.