சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு உள்ளது போல, ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 6ஆம் தேதி வெளியிடப்பட்டவுடன் அடுத்த 15 நாட்களில் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் தர வரிசை பட்டியல் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்கள் தரவரிசை பட்டியல் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளை தேர்வு செய்து சேர்க்கை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
அதாவது, "தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கல்லூரிகளில் கடந்தாண்டு மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. அதில் 2 லட்சத்து 46 மாணவர்கள் விண்ணப்பித்தனர். சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது. மாணவர்களிடமிருந்து பெற்ற விண்ணப்பங்கள் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி வாரியாக தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு, அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மாணவர்கள் கலந்தாய்வு அன்று கல்லூரியில் சேர்வதற்கான இடத்தினை தேர்வு செய்தனர். அவர்களுக்கான ஒதுக்கீடு கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து ஆன்லைன் மூலம் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ஒரே மாணவர் பல கல்லூரிகளில் சேர்வது தவிர்க்கப்பட்டு பிற மாணவர்களுக்கு கல்லூரியில் இடங்கள் கிடைத்தன.
இந்த நிலையில் கல்லூரி கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் 2024 - 2025ஆம் கல்வியாண்டில் 171 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 1,249 என 1,553 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
கடந்த ஆண்டு அரசு கலைக் கல்லூரி மாணவர்களின் சேர்க்கையை நெறிமுறைப்படுத்தியது போல், நடப்பாண்டில் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கையும் நடைமுறைப்படுத்த உயர் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு கடந்த ஆண்டு வரை அந்தந்த கல்லூரிகளுக்கு மாணவர்கள் தனித்தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் அரசு வெளியிட்ட வழிகாட்டுதலை பின்பற்றி மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மேலும், கல்லூரியில் விண்ணப்பம் தருவது குறித்து எந்த வித தகவலும் தெரியாமல் பெற்றோர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் தலைமையில் மார்ச் 6ஆம் தேதி கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற அரசு உதவிபெறும் கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தில், அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பின்பற்றப்படும் ஒற்றை சாளர முறை (Single Window System) போன்று அரசு உதவிபெறும் கல்லூரிகளின், உதவிபெறும் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கும் ஒற்றைச் சாளர முறையிலான மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கல்லூரி முதல்வர்களின் ஆலோசனைக்குப் பின், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள அரசு உதவிபெறும் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கையை ஒற்றை சாளர முறையில் (Single Window System) பின்பற்றுவது தொடர்பாக கல்லூரி முதல்வர்களை கொண்டு குழு அமைத்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. தற்போது, கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் ராமன் தலைமையில் 9 கல்லூரி முதல்வர்கள் கொண்ட குழு ஆய்வுகளை செய்து அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளது.
அதன் அடிப்படையில் சிறுபான்மை அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 50 சதவீதம், சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 90 சதவீதமும் ஒற்றை சாளர முறை கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை 2024 - 25 கல்வியாண்டில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கேற்ப அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை பெறுவது குறித்து கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிக்கவுள்ளது. விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்" என உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! - MP Ganeshamurthi Death