சென்னை:இயக்குநர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி தனி இடத்தை பிடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றவர். இவரது முந்தைய படமான இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான் லீனியர் படம் என்ற கின்னஸ் சாதனை படைத்தது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
மேலும், இப்படத்தில் இடம்பெற்ற மாயவா தூயவா பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்த நிலையில் தற்போது குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச த்ரில்லர் படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இமான் இசை அமைத்துள்ள நிலையில் காவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார். டீன்ஸ் எனப் படத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல் பார்வை முதல்முறையாக சென்சார் சான்றிதழுடன் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இசை அமைப்பாளர் இமானின் பிறந்தநாள் மற்றும் (TEENZ) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கின்னஸ் சாதனை அங்கீகரித்துள்ளதைக் கொண்டாடும் வகையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் அரங்கில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திபன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், “இதுபோன்ற 80, 90 கதைகளை நான் சேமித்து வைத்துள்ளேன். ஒவ்வொன்றாகத்தான் பண்ண முடியும். இரவின் நிழல் படத்தின் போது ஏகப்பட்ட எதிர்மறையான விஷயங்கள் உருவாகி விட்டது. நான் சொல்ல வந்த கதை வேறு. தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதைக் கவர்ச்சியாக யாரும் பார்த்ததில்லை.