சென்னை: இதுகுறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த ஜனவரி 6ஆம் தேதியன்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறை இயக்குனர் மற்றும் மருத்துவர் களத்தூர் ரவிகிருஷ்ணா ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், மாநில அமலாக்க அலுவலர், PCPNDT ACT, 1994/TNCEA-1997 மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மருத்துவர் இரா.இளங்கோ மகேஸ்வரன் ஆணைப்படி, இணை இயக்குனர் (சட்டம்) தலைமையில் இணை இயக்குநர் (குடும்ப நலம்) மற்றும் தேசிய சுகாதார திட்ட மாவட்ட மனநல மருத்துவர் ஆகியோரைக் கொண்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
விசாரணைக் குழுவினர் கடந்த மே 2ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட நேரடி ஆய்வில், மேற்காணும் மருத்துவமனையில் ஸ்கேன் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதும் மருத்துவர் முரளி உரிய அனுமதியின்றி ஸ்கேன் செய்ததும், மாதாந்திர அறிக்கைகளை அரசிடம் சமர்ப்பிக்காமல் இருந்ததும், மேலும் கர்ப்பிணிகளிடம் பெறக்கூடிய Form-F முறையாக பராமரிக்கப்படாததும் கண்டறியப்பட்டது.
மேற்காணும் குறைபாடுகளைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் மாவட்ட அமலாக்க அலுவலர், PCPNDT Act, 1994 அவர்களால் உரிய விளக்கம் கோரப்பட்டது. கடந்த மே 17ஆம் தேதி நாளிட்ட தனியார் மருத்துவமனையின் விளக்க கடிதமானது குறைபாடுகளுக்கு தொடர்பில்லாமலும், திருப்தியின்றியும் அமைந்தது. அதனைத் தொடர்ந்து, விசாரணைக் குழுவானது மே 23ஆம் தேதியன்று தனியார் மருத்துவமனையில் மீண்டும் நேரடி ஆய்வு மேற்கொண்டது.