சென்னை:டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வினை, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் எழுதிய நிலையில், தற்போது ஐடிஐ பட்டதாரிகளுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மேலும், டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் இப்பணிக்குத் தகுதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வு எழுதிய 27 ஆயிரம் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு வேலைகளில் பணிகளை நியமிக்கும் டின்பிஎஸ்சி சார்பில், கடந்த 2023ஆம் ஆண்டு சாலை ஆய்வாளர் பணிக்கான அறிவிப்பு வெளியானது. இதில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்ததால், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வினை எழுதியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அஜய், சந்தோஷ்குமார், கல்பனா பேட்டி (ETV Bharat Tamil Nadu) டிஎன்பிஎஸ்சி தகுதி மாற்றம்:
இந்நிலையில், இத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த நவ.27 ஆம் தேதி வெளியாகியுள்ளது. அதில், ஐடிஐ பட்டதாரிகளுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அவர்களுடன் தேர்வு எழுதிய டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் இப்பணிக்கு தகுதியில்லை எனத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால், அரசுப் பணியில் சேர வேண்டும் என சாலை ஆய்வாளர் பணிக்காக தேர்வு எழுதிய, சுமார் 27 ஆயிரத்திற்கும் அதிகமான டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அஜய் (ETV Bharat Tamil Nadu) இந்நிலையில், இது குறித்து தேர்வு எழுதிய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகள், டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் முன்பாக பதாகைகளுடன் வருகை புரிந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட அஜய் என்பவர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், "2023 ஆம் ஆண்டு சாலை பணியாளருக்கான தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்த மாணவர்களும் தேர்வு எழுதினோம். ஆனால், தற்போது ஐடிஐ பட்டதாரிகளுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. டிப்ளமோ மற்றும் பொறியியல் மாணவர்கள் எழுதிய தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேதனையுடன் தெரிவித்தார்.
தமிழக அரசுக்கு கோரிக்கை:
சந்தோஷ்குமார் (ETV Bharat Tamil Nadu) அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சந்தோஷ்குமார் கூறுகையில், "கடந்தாண்டு நடத்தப்பட்ட சாலை ஆய்வாளர் பணிக்கு தேர்வு எழுதிய நிலையில், தேர்வு முடிவு வரும் எனக் காத்திருந்தோம். இதற்கிடையில் தேர்வுக்கான தகுதி மாற்றப்பட்டதால் அதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிட்ட சிலருக்கான தேர்வு முடிவுகள் மட்டுமே வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி: தமிழ்வழி சான்றிதழ் முறைகேடு விவகாரம்: தேர்வர்களுக்கு தற்காலிக நியமன ஆணை?
டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இது எங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. சுமார் 27 ஆயிரம் பேர் இந்த தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.
கல்பனா (ETV Bharat Tamil Nadu) அரசு மீது நம்பிக்கை இழப்பு:
பின்னர், இந்த தேர்வை நம்பி பார்த்த வேலையைக் கைவிட்ட கல்பனா என்ற நபர் கூறுகையில், "கடலூரில் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை பார்த்து வந்தேன். சாலை பணியாளருக்கான தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு எழுதி வேலை வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில், நான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, தேர்வுக்கு முழுதாக தயாராகித் தேர்வு எழுதினேன். இந்நிலையில், தற்போது ஐடிஐ முடித்தவர்கள் மட்டுமே தேர்வுக்கு தகுதியானவர்கள் என டிஎன்பிஎஸ்சி தகுதி மாற்றம் செய்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பாக குவிந்த தேர்வு எழுதிய பட்டதாரிகள் (ETV Bharat Tamil Nadu) டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தி அரசுப் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறும் நிலையில், தற்போது தேர்விற்கான அறிவிப்பு வெளியிட்டுப் பின்னர் அதற்கான தகுதியை மாற்றுவது டிஎன்பிஎஸ்சி மீதான நம்பிக்கை தன்மையை இழக்கச் செய்கிறது. தமிழக முதலமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமார் 30,000 பட்டதாரிகள் இந்த தேர்வு எழுதிக் காத்திருக்கிறோம். 30 ஆயிரம் நபர்களைத் தாண்டி 30 ஆயிரம் குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. எங்களுக்கு தேர்வு முடிவை சரியாக வெளியிட்டு எங்களின் தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.