திண்டுக்கல்: இயக்குநர் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிய திரைப்படம் இந்தியன் 2. இத்திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் ஏற்கனவே வர்மக்கலை முத்திரை தொடர்பாக சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் ஒரு புது பிரச்னை வந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர் சங்கத்தினர் பேட்டி (CREDIT - ETV Bharat Tamil Nadu) திண்டுக்கல் மாவட்டம் தனியார் திருமண மண்டபத்தில், திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய (e-Sevai centre) உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தியன் 2 (Indian 2) திரைப்படத்தில் இ-சேவை மையத்தில் பணிபுரிபவர்களை தவறுதலாக சித்தரித்துள்ளதாகவும், அந்த காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் படக்குழுவுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இ-சேவை மையம் உரிமையாளர்கள் நலச் சங்க மாவட்ட தலைவர் தனராஜ், "இந்தியன் 2 திரைப்படத்தில் மனோபாலா வரும் காட்சியில் இ-சேவை மையத்தினர் 300 ரூபாய் கொடுத்தால் மட்டுமே சேவை செய்ய முடியும் என தவறுதலாக சித்தரித்து எடுக்கப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும். அப்படி எடுக்கப்பட்ட காட்சிகளினால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இ-சேவை மைய உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகப்பட்டு வருகிறது.
மேலும், இதுதொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில், நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட ஆட்சியரிடம் இ-சேவை உரிமையாளர் நலச் சங்கம் சார்பாக இந்தியன் திரைப்பட இயக்குநர் ஷங்கர் மீது புகார் மனு அளிக்கப்பட்டு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மேலும், இந்தியன் 2 திரைப்படத்தில் நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போகின்றோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'சர்தார் 2' ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு - தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!