தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரம் ஆதினம் விவகாரம்: முன்னாள் உதவியாளர் செந்தில் ஜாமீன் மனு தள்ளுபடி! - Dharmapuram Adheenam - DHARMAPURAM ADHEENAM

Dharmapuram Adheenam: மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ, ஆடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலின் முன்ஜாமீன் மனுவை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தருமபுரம் ஆதினம், உதவியாளர் செந்தில் புகைப்படம்
தருமபுரம் ஆதினம், உதவியாளர் செந்தில் புகைப்படம் (Credit -ETVBharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 8:33 PM IST

வழக்கறிஞர் ராமசேயோன் செய்தியாளர் சந்திப்பு (Credit -ETVBharat TamilNadu)

நாகப்பட்டினம்:மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த புகாரில், மயிலாடுதுறை போலீஸார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பாஜகவின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், திருவெண்காடு சம்பா கட்டளையைச் சேர்ந்த விக்னேஷ், செம்பனார்கோயில் தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ், ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், வழக்கில் தொடர்புடைய செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், தருமபுர ஆதீனகர்த்தரின் நேர்முக உதவியாளர் செந்தில், செம்பனார்கோவில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார், திருச்சியைச் சேர்ந்த பிரபாகர் ஆகிய 4 பேர் கைது செய்யப்படாததால் போலீசார் குறறப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், ஆதீன மடத்தில் இருந்து ஆதின நேர்முக உதவியாளர் செந்தில் பணிநீக்கம் செய்யப்பட்டார். வழக்கில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் ஜாமீன் பெறமுடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட 4 பேர் 90 நாட்கள் சிறையில் இருந்ததை தொடர்ந்து நிபந்தனை ஜாமீன் பெற்று விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 வது நபரான தலைமறைவாக உள்ள தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் முதல்முறையாக முன்ஜாமீன் கேட்டு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாயகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது செய்யப்படாததால் வழக்கில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யமுடியவில்லை என்றும் செந்திலை கைது செய்து நீண்ட விசாரணை செய்தால்தான் வழக்கு முடிவடையும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகி வாதிட்டார்.

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏனைய குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனு விசாரணையில் செந்தில் அவசியம் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்ததை மேற்கோள்காட்டினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மாயகிருஷ்ணன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க: "அதிமுக எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது" - ஓ.பன்னீர்செல்வம் விளாசல்!

ABOUT THE AUTHOR

...view details