தருமபுரி: திமுகவைச் சேர்ந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார், சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தருமபுரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பாலக்கோடு புதூர் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.
இத்திருவிழாவில் விழாக் குழுவினர் மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் மருத்துவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான செந்தில்குமார், கோயில் கருவறைக்குச் சென்று, அங்கு வழங்கப்பட்ட மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
கோயிலில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, தனது எக்ஸ் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், தருமபுரி திமுக எம்பி விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் கோயிலுக்குs சென்று நாடகம் நடத்துகிறார் என நெட்டிசன்கள் பல்வேறு வகைகளில் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நடைபெற்ற பூமி பூஜையில் அனைத்து மதங்களைச் சேர்ந்த குருமார்களும் பூமி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும், அனைவருக்கும் சமமான உரிமை வழங்க வேண்டும் என அவர் கூறிய வீடியோ நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் மாரியம்மன் கோயிலுக்குச் சென்ற புகைப்படம் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.