மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானமாக உள்ளவர், தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோல் வழங்கியதன் மூலம் நாடு முழுவதும் அறியப்பட்ட ஆதீனமாக புகழ்பெற்றார். 2023ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் போது, தமிழ்நாட்டிலிருந்து ஆதீனங்கள் சென்று பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கினர். அந்த குழுவில் தருமபுரம் ஆதீனமும் இடம்பெற்றிருந்தார். தேவார பாசுரங்கள் பாடி பிரதமர் மோடிக்கு செங்கோலை வழங்கினார்.
இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி பிப்ரவரி.25ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவர், தன்னிடம் தருமபுரம் ஆதீனகர்த்தர் சம்பந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாகவும், 40 கோடி ரூபாய் கொடுக்காவிட்டால், சமூக வலைத்தளங்களிலும், டிவி சேனல்களிலும் அந்த ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆதின மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவதாகவும்" மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், பணத்தைப் பெறுவதற்காக திருவெண்காடு சம்பக்கட்டளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் என்பவரை வைத்து பேரம் பேசியதாகவும். போலீசாரிடம் புகார் அளித்தால், ரவுடிகள் மூலம் மடத்தைச் சார்ந்தவர்களை கொலை செய்யக்கூட தயங்கமாட்டோம் என்று மிரட்டியதாகவும் வினோத் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், செம்பனார்கோவிலைச் சேர்ந்த குடியரசு, ஜெயச்சந்திரன், மற்றும் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.