திண்டுக்கல்: பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளானமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
2 நாள் கொண்டாட்டம்: முருனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கி நாளை வரை அருள்மிகு பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் இங்கிலாந்து, இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், முருகனின் சிறப்பை உலகறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் முருகன் வழிபாட்டு சிறப்புகள், இலக்கிய சிறப்புகள் குறித்து மாநாட்டில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. முருகன் வழிபாடு என்பது இந்தியா, இலங்கை, மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், மொரிசியஸ், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்ற வழிபாடாகச் சிறந்து விளங்குகிறது.
முருகனின் சிறப்புகள் குறித்த கண்காட்சி:உலக முருக பக்தர்களையும், சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து இந்து சமய அறநிலையத்துறை இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், மாநாட்டுக்கு வரும் பொதுமக்கள், பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் முருகனின் சிறப்புகள் குறித்த கண்காட்சி அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள், முருக பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாநாடு துவங்கப்பட்டது முதல் அதிகளவில் பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை முருகன் புகைப்படக் கண்காட்சி மற்றும் 3D திரையரங்கில் முருகப் பாடல்களையும் கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது அதிகளவில் மக்கள் மற்றும் பக்தர்கள் மாநாட்டைக் காண வருந்துள்ளனர்.