கோயம்புத்தூர்:திராவிட இயக்கம் இருக்கும் வரை சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்போம் எனவும், கிறிஸ்தவ மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, SPC பெந்தெகோஸ்தே சபைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கிறிஸ்தவன் என்பதில் பெருமை
அங்கு நிகழ்ச்சியில் பேசிய அவர், "நானும் ஒரு கிறிஸ்துவன். இது பலரைக் கோபப்படுத்தும். அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை போதிக்கின்றது. மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலரும் உள்ளனர். என்னை எந்த மதத்தைச் சேர்ந்தவனாக நீங்கள் நினைக்கிறீர்களோ, நான் அந்த மதத்தைச் சேர்ந்தவன்.
மதரீதியான அவதூறு பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்தபோது அதிமுக அதனை ஆதரிக்கவில்லை. இதன் மூலமாக அதிமுக - பாஜக மறைமுகக் கூட்டணி தொடர்கிறது என்பது உறுதியாகிறது. அதிமுக பொதுக்குழுவில் கூட்டத்தில், மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஒரு தீர்மானமும் கொண்டுவரப்படவில்லை," என்று தெவித்தார்.
இந்நிகழ்வில், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் மர்ற்ய்ம் மேயர் கா.ரங்கநாயகி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு, டான் பாஸ்கோ பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், நானும் என் மனைவியும் கிறிஸ்தவர்கள் என பேசியபோது, பாஜக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் அதை பிரச்னையாக பேசின.
இந்துகள் பண்டிகைக்கு மட்டும் திமுக அரசு வாழ்த்து சொல்வதில்லை எனவும், கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில் மட்டும் திமுக தலைவர்கள் பெருமை கொள்கின்றனர் எனவும் கருத்துகள் பதிவு செய்திருந்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.
நான் முதல்வன் நிகழ்வு
கோவை தடாகம் பகுதியில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 'நான் முதல்வன்' திட்டத்தின் சார்பில் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையம் தொடக்க விழா நேற்று (டிச.18) புதன்கிழமை நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறப்பாக பயிற்சி வழங்கிய Skill Trainers -க்கு பரிசுத் தொகை, முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ள மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.