விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயக்கி வருகின்றன. இதில் திருவக்கரை பகுதி அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான குவாரி ஒன்றில், இன்று (பிப்.8) காலை வழக்கம்போல் பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகளை உடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பாறை கற்கள் சரிந்து விழுந்து, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் எரையூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் ஆகிய இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக உயிரிழந்தவர்களின் உடலை பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியில் எடுத்துள்ளனர்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.