தூத்துக்குடி: தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த அரிய வகை கடல் ஆமையை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
தூத்துக்குடி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை ஆமை இனங்கள் முட்டைகளை இட்டு, குஞ்சு பொரித்து உயிர் வாழ்ந்து வருகின்றனர். இதனால், இப்பகுதியில் உள்ள ஆமைகளை, மீனவர்கள் உணவுக்காகப் பிடிக்கவோ, வேட்டையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அழிந்து வரும் ஆமை இனங்களை பாதுகாக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதையும் படிங்க:சோதனைக் கூடத்திலிருந்து தப்பிய குரங்குகள்! பொதுமக்கள் அச்சம்
இந்நிலையில், நேற்று (நவ.10) காலை முத்துநகர் கடற்கரை பகுதியில், அரிய வகை கடல் ஆமை இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. கரை ஒதுங்கிய ஆமை சுமார் மூன்றடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்டதாக இருந்துள்ளது. அதன் முகத்தில் கண்கள் இல்லாமல், வாய் மற்றும் இறக்கை பகுதிகள் சேதம் அடைந்து அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. கடற்கரையில் இறந்து ஒதுங்கிக் கிடந்த ஆமையை கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பார்த்து சென்றனர்.
இதையடுத்து, ஆமை இறந்து ஒதுங்கியது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் ஆமை எவ்வாறு இறந்தது? யாரும் ஆமையை வேட்டையாடி கொன்றார்களா? அல்லது இயற்கையாக ஆமை இறந்ததா? என்பது குறித்து விசாரணை செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, ஆமை உடற் கூறாய்வு செய்யப்பட்டு அதே பகுதியிலேயே புதைக்கப்பட்டுள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்