சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்.12) காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்தியுள்ளது. மேலும், கட்சி கொடியினை ஒருவார காலத்துக்கு அரைக் கம்பத்தில் பறக்க விட்டு மரியாதை செலுத்துமாறு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 19-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இடதுசாரி கொள்கையில் தீவிரமாக செயல்பட்டு வந்த இவர் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பல முறை மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வாரம் காலம் துக்கம் அனுசரிக்கிறது. அதன்படி, சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.