நீலகிரியில் சுற்றுலா பயணியிடம் பறிமுதல் பணத்தை திருப்பி வழங்கிய வருவாய் கோட்டாட்சியர் நீலகிரி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பறக்கும் படையினர் நாடு முழுவதும் பல இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் விதிமுறைகளை மீறி, உரிய ஆவணமின்றி கொண்டு வரப்படும் பணம் உள்ளிட்டவற்றைப் பறிமுதலும் செய்து வருகின்றனர்.
வழக்கம்போல், நேற்று குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை டபுள் ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது குழந்தைகளுடன் விமான நிலையத்திலிருந்து, வாடகைக் கார் மூலம் உதகைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, பறக்கும் படையினர் காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அதில், அந்த சுற்றுலாப் பயணிகளிடம் ரூ.69 ஆயிரத்து 400 இருந்தது தெரியவந்துள்ளது. அதற்கான உரிய ஆவணம் எதுவும் இல்லாததால், தேர்தல் பறக்கும் படையினர் அப்பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். அப்போது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அப்பெண், "நாங்கள் பஞ்சாபில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து வாடகை காரில் ஊட்டிக்கு இன்பச் சுற்றுலா வந்தோம். எங்களுக்கு இவ்வளவு பணம் கையில் கொண்டு வரக்கூடாது எனத் தெரியாது. செலவிற்குக் கூட பணம் இல்லை, ஆகையால் எங்களது பணத்தைத் திருப்பித் தந்து விடுங்கள்" எனக் கதறி அழுதுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால், தேர்தல் பறக்கும் படையிலிருந்த குழுவினருக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் சரியாகத் தெரியவில்லை என்பதாலும், சுற்றுலா வந்த நபர்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியைத் தவிர வேறு மொழியும் தெரியவில்லை என்பதாலும் இரு தரப்பினருக்கும் இடையே சரியாகப் பேசி புரிய வைக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் அப்பணம் மாவட்ட வட்டாட்சியரிம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "நேற்று பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளிடம் உரிய ஆவணமின்றி ரூ.69,400-யை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) தலைமையிலான குழு ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், குன்னூர் வருவாய்க் கோட்டாட்சியர் மூலம் சம்பந்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அப்பெண் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் உள்ளூர் வியாபாரிகள் மருத்துவச் செலவிற்காக எடுத்துச் செல்லும் பணத்தைப் பறிமுதல் செய்யாமல் இருக்க தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறும்: நெல்லை கூட்டத்தில் முதலமைச்சர் ஆவேச பேச்சு! - Mk Stalin Propaganda