தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் நடத்தலாம்; சாம்சங் ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சாம்சங் நிறுவன ஊழியர்கள் அமைதியான முறையில் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ஊழியர்கள் போராட்டம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப் படம்
ஊழியர்கள் போராட்டம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரத்தில் உள்ள தென்கொரிய நிறுவனமான, 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்' நிறுவனத்தில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்நிறுவனத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். அதில், குறைந்த சம்பளத்திற்கு தொழிலாளர்களை நியமித்து அதிக வேலை வாங்குவதாகவும், நடைமுறைக்கு சாத்தியமில்லாத இலக்கினை நிர்ணயித்து பல மணி நேரங்கள் கூடுதலாக வேலை வாங்குவதாகவும், தங்களின் பிரச்சனைகளை களைவதற்காக தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியைத் தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.

மேலும் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு சிஐடியு தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டு சங்கம் பதிவு செய்வதற்காக அனைத்து ஆவணங்களும் வழங்கிய பிறகும், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையோ? சங்கத்தை பதிவு செய்ய மறுக்கிறது? அந்நிய நாட்டு சாம்சங் நிர்வாகத்திற்கு சாதகமாக அரசு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனால், சிஐடியூ தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் சாம்சங் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தொழிலாளர்களுடன், அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பல மணி நேர பேச்சுவார்த்தையில், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்ற காவல்துறையினர் 10க்கும் மேற்பட்டோரை நேற்று (அக் 08) இரவு கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து சிஐடியு சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீற்றை ஏற்று வழக்கு பிற்பகல் நீதிபதிகள் பாலாஜி, அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க:சாம்சங் ஊழியர் போராட்டம்: சங்கத்திற்கு அங்கீகாரம் வேண்டி தொடரும் வேலைநிறுத்தம்! கைது நடவடிக்கைகள் எதற்கு?

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சட்டவிரோதமாக சாம்சங் நிறுவன ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள்? என காவல்துறை தெரிவிக்கவில்லை. நீதிமன்ற அனுமதியின் படி சாம்சங் நிறுவனத்திலிருந்து 500 மீட்டர் தூரத்திற்கு அப்பால் அமைதியான முறையில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

30வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. திடீரென காவல்துறை கைது செய்ய வேண்டிய காரணம் என்ன? அமைதியான முறையில் நடைபெறும் ஊழியர்களின் போராட்டத்தை தடுக்க கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,"சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதால் அக். 08ம் தேதி நள்ளிரவு 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஶ்ரீபெரம்பத்தூர் நடுவர், சிறையில் அடைக்க மறுத்து விட்டதால் அனைவரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். யாரையும் சட்டவிரோத காவலில் வைக்கவில்லை என தெரிவித்தார்.

இதையும் படிங்க:வேறு மாநிலத்திற்கு செல்கிறதா சாம்சங் தொழிற்சாலை? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கைது செய்யப்பட்ட ஊழியர்களை சிறையில் அடைக்க ஶ்ரீபெரம்பத்தூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி மறுத்து விட்டதால், அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர், எதற்காக இந்த வழக்கு? என கேள்வி எழுப்பினர். மேலும், சட்டத்திற்கு உட்பட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தலாம், சட்டத்தை மீறினால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள். அமைதியான முறையில் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தலாம் எனவும் உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details