திருச்சி:திருச்சி ரயில் நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “யாரையோ திருப்திப்படுத்துவதற்காகப் பெரியாரைப் பற்றி சீமான் அவதூறாகப் பேசி வருகிறார்.
இவர் செய்வது தேவையில்லாத ஒன்று. இறந்து போனவர்களை வைத்துத்தான் சீமான் அரசியல் செய்வார். இதில், அவருக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கிறது என்று தெரியவில்லை. இதைத் தவிர்ப்பது தான் அவருக்கும், அவருடைய இயக்கத்திற்கும் நல்லது.
“டங்ஸ்டன் பற்றி முதலமைச்சர் பார்த்துக்கொள்வார்”:
டங்ஸ்டன் விவகாரத்தில் நாளை மத்திய அரசு ஏதேனும் நல்ல முடிவு அறிவித்தாலும், அதை நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரம் மாநில அரசுக்குத்தான் உள்ளது. அந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார். மத்திய அரசு முடிவெடுக்க முடியாது.
செல்வப்பெருந்தகை பேட்டி (ETV Bharat Tamil Nadu) ஏற்கனவே சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவாகக் கூறிவிட்டார். டங்ஸ்டனை நாங்கள் கொண்டு வர மாட்டோம். அப்படிக் கொண்டு வந்தால் நான் முதலமைச்சராக இருக்க மாட்டேன் எனத் தெளிவாக தெரிவித்துவிட்டார். அண்ணாமலைக்கு ஏதாவது ஒன்றை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டும். நான் பேட்டி கொடுப்பதை விமர்சிக்கவே, அண்ணாமலை கட்சி வைத்து அரசியல் செய்து வருகிறார்.
“அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை”:
கச்சத்தீவைப் பற்றிப் பேசும் அண்ணாமலை அருணாச்சலப் பிரதேசத்தைப் பற்றி ஏன் பேசவில்லை? இந்திராகாந்தி, ராஜீவ்காந்தியைப் பற்றி அண்ணாமலை மிகவும் கொச்சையான வார்த்தைகள் பயன்படுத்திப் பேசுகிறார். அண்ணாமலைக்கு நாவடக்கம், நாகரிகம் வேண்டும். இவரைப் போன்று எவ்வளவோ பேர் பேசியவர்கள் இப்போது காணாமல் போயிருக்கிறார்கள். பண்பாகச் சொல்கிறேன், அண்ணாமலை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
“விடுதலைக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை”:
விடுதலை, தியாகம், சுதந்திரம் போன்றவற்றுக்கும், உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் அனைத்தையும் கையில் எடுக்க வேண்டிய சூழல் வரும். கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்தவர்கள் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி எனத் தேசிய தலைவர்களைப் பற்றி அண்ணாமலை பேசுவதற்கு இந்த தேசத்தில் இவர்கள் யார், பாஜகவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.
இதையும் படிங்க:டங்ஸ்டன் திட்டம் ரத்துன்னு அண்ணாமலை சொன்னா எப்படி? அமைச்சர்ல சொல்லணும்! - அரிட்டாபட்டி மக்கள் கேள்வி
வேங்கை வயல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்துகிறார்? நாங்களும் அதைத்தான் சொல்கிறோம், எதுவும் கடந்து போக முடியாது. நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். அதுமட்டுமில்லை அமைச்சர் கே.என்.நேருவின், சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கிலும் நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தி வருகிறோம். காவல்துறைக்கும் சில வழக்குகள் சவாலாக இருக்கிறது.
விமர்சனம் செய்யும் நபர்களுக்கு குற்றவாளிகள் யார்? என்று தெரிந்தால் சொல்லச் சொல்லுங்கள். அனைத்திலும் அரசியல் பேசுவதற்காக ஏதாவது ஒன்றைப் பேசக்கூடாது. குற்றச் சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் இரும்புக் கரம் கொண்டு காவல்துறையினர் அடக்க வேண்டும்.
“ஈரோட்டில் அவதூறு பிரச்சாரம் போராட்டம்தான்”:
பெரியாரைப் பற்றி அவதூறாகப் பேசிவிட்டு, பெரியார் பிறந்த மண்ணில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரச்சாரம் செய்தால் அவருடைய ஆதரவாளர்கள் எப்படி அமைதியாக இருப்பார்கள். இந்த மண் மக்கள் கேள்வி கேட்கத் தான் செய்வார்கள் அதற்குப் பதில் சொல்லுங்கள். இன்னும் 13 அமாவாசையில் திமுக ஆட்சி முடிந்து விடும் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். அமாவாசைகளுக்கெல்லாம் அம்மாவாசை தான் பதில் சொல்ல வேண்டும். என்னைக் கேட்டால் நான் என்ன சொல்வது” எனத் தெரிவித்தார்.