சென்னை:சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அழகு முத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அண்ணாமலை பேட்டி (Credit - ETVBharat TamilNadu) அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "31 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த வீரர் அழகுமுத்துக்கோனுக்கு 2015ஆம் ஆண்டு நமது மத்திய அரசு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளோம். தமிழ்நாடு பாட கழகத்திற்கு ஒரு ஆணையிட வேண்டும், வீரமுத்துக்கோன்னின் வரலாறு பாடப் புத்தகத்தில் இடம் பெற முதலமைச்சர் வழி செய்வார் என நம்புகிறோம்" என்றார்.
அண்ணாமலையை வேதாளம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதற்கு பதிலளித்தவர், "பல பேய்கள் தமிழ்நாட்டில் உள்ளது. இந்த வேதாளம் வந்ததே அந்த பேய்களை ஓட்ட தான். தற்போது ஒவ்வொரு பேயாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த பேயை ஓட்டிவிட்டு அந்த பேய்க்கு வருகிறேன். இத்தனை பேய் இருப்பதால் ஒரே நேரத்தில் செல்ல முடியாது.
ஒவ்வொரு பேயாக தான் சென்று வர முடியும். 70 ஆண்டு காலமாக தமிழகத்தில் வளர்ச்சி இல்லை. வறுமைக்கோடு, விவசாயத்தற்கு தண்ணீர் இல்லை. இதற்கெல்லாம் காரணம் இந்த பேய்கள் தான். அதனால் ஒவ்வொரு பேயாக துரத்திக் கொண்டு வருகிறேன். இந்தப் பேய் முடித்துவிட்டு திரும்பவும் அந்த பேய்க்கு வருகிறேன், பொறுத்திருந்துக்க வேண்டும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "நான் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை முன்னாள் ரவுடி என்பது சொன்னது பொய் இல்லை. அதற்கான தரவுகளை வெளியிட்டுள்ளேன். அவர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்பது பொய். இன்று காங்கிரஸ் தலைவர்கள் எனக்கு தொலைபேசி வாயிலாக இதனைப் பற்றி பேசியதற்கு நன்றி என கூறி வருகிறார்கள்" என தெரிவித்தார்.
மேலும், "சாட்டை துரைமுருகனை அடிக்கடி கைது செய்வது என்ன அர்த்தம், காவல்துறை இந்த வீரத்தை கூலிப்படை ரவுடிகள் மீது காட்ட வேண்டும். குறிப்பாக, சாட்டை துரைமுருகனை டார்கெட் செய்வது நல்லதல்ல, மிகவும் அசிங்கமான ஒரு செயல். எத்தனை ஆண்டுகள் திமுகவுக்கு காவல்துறை வேலை செய்வார்கள் என பார்க்கிறேன். மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.
இதையும் படிங்க: 'அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்! - MINISTER JAYAKUMAR