திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஊராட்சிக் குழுவில் அதிக உறுப்பினர்களை பெற்றதன் மூலம், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. இதனை அடுத்து, அதிமுகவைச் சேர்ந்த சத்யபாமா, மாவட்ட ஊராட்சி தலைவராக தற்போது பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சத்யபாமா தலைமை தாங்கினார். செயலாளர் முரளி கண்ணன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சத்யபாமா, மாவட்ட ஊராட்சி செயலராகப் பதவி வகிக்கும் முரளி கண்ணன் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், மாவட்ட ஊராட்சி பகுதி வளர்ச்சிக்கு அரசு ஒதுக்கும் நிதியை, தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதாக அவர் கவுன்சில் கூட்டத்தில் பேசினார். இதுமட்டுமல்லாது, அலுவலக பயன்பாட்டுக்கு என பொருட்கள் வாங்குவதில் கூட தனது அனுமதி கேட்பதில்லை எனவும், தானாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த சூழ்நிலையில், மாவட்ட கூட்டரங்கில் பேசிக் கொண்டிருக்கும்போதே, இது தொடர்பாக மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சத்யபாமாவுக்கும், மாவட்ட ஊராட்சி குழு செயலர் முரளி கண்ணனுக்கும் இடையே விவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பேசிய சத்யபாமா, "மாவட்ட ஊராட்சி குழு செயலர் முரளி கண்ணன் செய்வது எதுவுமே சரியில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சித் தலைவரின் அறையில் தினமும் படுத்து தூங்குகிறார். அங்கேயே பாய், தலையணை, சோப்பு, சீப்பு உள்ளிட்ட பொருட்களை வைத்திருக்கிறார்.
இதுமட்டுமல்லாது, தினமும் அந்த அறையில்தான் குளிக்கிறார். இது எல்லாம் சரியா? இவையெல்லாம் நான்கு ஆண்டுகளாக நடக்காத செயல். மாவட்ட ஊராட்சித் தலைவர் அறையில் அரசு அதிகாரி இப்படி செய்யலாமா" என்று மாவட்ட ஊராட்சி குழு கவுன்சில் அரங்கில் அனைவரது முன்பும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வாறாக, மாவட்ட ஊராட்சிக் குழு செயலர் முரளி கண்ணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சத்யபாமா, கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி ஆவேசமாக வெளியேறினார். அங்கிருந்து சென்ற அவர், தனது அறையில் மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளி கண்ணன் தூங்குவதற்காக வைத்திருந்த பாய், தலையணை மற்றும் சோப்பு, சீப்பு உள்ளிட்ட பொருட்களை அனைவரிடமும் காட்டி கேள்வி எழுப்பினார். இந்த சம்பவத்தால், திருப்பூர் மாவட்ட ஊராட்சிக் குழுவின் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:விக்கிரமசிங்கபுரம் சார்பதிவாளர் அலுவலக பெண் உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!