தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி பட்டாசு விற்பனை; ரூ.1 கோடி இலக்கு நிர்ணயித்த வேலூர் கலெக்டர்!

தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனைகளுக்கு அனுமதி இல்லை. தீபாவளிக்கு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி
வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2024, 3:47 PM IST

வேலூர்: தீபாவளி பண்டிகை வருகிற 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்றும் 8 நாட்களே உள்ளதால், பல்வேறு பகுதிகளில் பட்டாசு விற்பனை மும்முரமாகியுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம், அண்ணா சாலை பகுதியில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு கற்பகம் வளாகத்தில் தீபாவளி பட்டாசுகள் விற்பனையை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று துவங்கி வைத்தார். இந்த நிகழ்வில் வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பேசியதாவது, “வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை 85 ஆண்டுகளாக நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு விற்பனை இங்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.85 இலட்சத்திற்கு பட்டாசு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.1 கோடி என்ற இலக்கில் பட்டாசு விற்பனையை துவக்கி வைத்துள்ளோம்.

இதையும் படிங்க:தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு; காலை, மாலை எந்த நேரத்தில் வெடி வெடிக்கலாம்?

பொதுமக்கள் பட்டாசுகளை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை மக்கள் பின்பற்றி பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனைகளுக்கு அனுமதி இல்லை. தீபாவளி அன்று மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, தீயணைப்பு துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதம் முதல் தேதியில் இருந்து ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்கிறோம். ஒரு சில ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மிஷின் பிரச்சனை உள்ளது. அதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ABOUT THE AUTHOR

...view details