தென்காசி: தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ள குற்றாலம், தென் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு, தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்றனர்.
குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் சீசன் காலம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மாதங்களிலும் மேற்குத் தொடர்ச்சிமலை பகுதிகளில் பெய்யும் மழையினால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும். இதனால் அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த மாதத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகப் பகுதியில் உள்ள தென்காசி, நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அந்த வகையில், தென்காசி மாவட்டம், குற்றாலம் மலைப்பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றால அருவியில் கடந்த மே மாதம் 17ஆம் தேதி திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயதுடைய அஸ்வின் என்ற சிறுவன் பலியான நிலையில், பழைய குற்றால அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்கும் பரிசீலனை தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியானது.