திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே இருக்கும் கிராமங்கள் பனையாங்குறிச்சி, குமாரசாமிபுரம், பாரதி நகர். இந்த கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு காலையில் போதிய பேருந்து வசதி இல்லாததால் சுமார் 100 மாணவர்களும் 3 கிலோ மீட்டர் தினந்தோறும் நடந்து ஆலங்குளம் மற்றும் அம்பாசமுத்திரம் மெயின் ரோட்டிற்கு வந்து. பின்னர் வேறு பேருந்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு செல்லும் அவலநிலை இருந்து வந்தது.
பனையாங்குறிச்சி பேருந்து வசதி குறித்து மாணவி கன்னிகா பேட்டி (CREDITS - ETV Bharat Tamil Nadu) இந்நிலையில் பனையங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் இதுகுறித்து மனு அளித்தனர். இந்த மனு அளித்த அடுத்த நாளே மாணவர்களின் மனுக்கிணங்க உடனடி நடவெடிக்கை எடுக்க மாவட்டஆட்சியர் கார்த்திகேயன், நெல்லை போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் போக்குவரத்து கழக அதிகாரிகள் நேற்று முன்தினம் (செவ்வாய் கிழமை) பனையங்குறிச்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து நேற்று முதல் அதிரடியாக பனையங்குறிச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மாணவர்களின் மனுவை ஒரே நாளில் ஏற்று, அவர்களின் கோரிக்கையை செயல்படுத்திய தமிழக அரசிற்கும், ஆட்சியருக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.இந்த பேருந்து பனையங்குறிச்சிக்கு உட்புற பகுதிகளுக்கு சென்று மீண்டும் மெயின் ரோட்டிற்கு வந்து செல்வதால் மாணவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேசமயம் தற்போது பனையங்குறிச்சிக்கு மட்டுமே பேருந்து வந்து செல்வதால், அதையும் தாண்டி மீதம் இருக்கும் குமாரசாமிபுரம், பாரதி நகர் ஆகிய கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்த தர வேண்டும் என அந்த பகுதி மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து பனையங்குறிச்சி பள்ளி மாணவி கண்ணிகா கூறுகையில், “ எங்கள் ஊருக்கு ஐந்து ஆண்டுகளாக எந்தவித அரசு பேருந்து வசதியும் இல்லை. இதனால் நாங்கள் மழையிலும் வெயிலிலும் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தும், சைக்கிளிலும் பள்ளிக்கு சென்று இருக்கிறோம். அப்போதெல்லாம் மிகவும் அவதிக்கு உள்ளாகி இருந்தோம்.இப்போது நாங்கள் அளித்த மனுவிற்கு ஒரே நாளில் பேருந்து வசதி அமைத்து கொடுத்த அரசுக்கும், ஆட்சியருக்கும் மிக்க நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வங்கி ஆவணங்கள் வழங்கக்கோரிய செந்தில் பாலாஜி மனு; தீர்ப்பு தள்ளிவைப்பு!