தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈமு கோழி மோசடி: குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை; பல கோடி ரூபாய் அபராதம்! - COIMBATORE SUSI EMU FARMS SCAM

ஈமு கோழி பண்ணை மோசடி வழக்கில் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மோசடி செய்த தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஈமு கோழி | பத்தாண்டுகள் தண்டனை பெற்ற குருசாமி
ஈமு கோழி | பத்தாண்டுகள் தண்டனை பெற்ற குருசாமி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 8:08 PM IST

கோயம்புத்தூர்: ஆஸ்திரேலியா நாட்டு பறவையான ஈமு கோழி வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக்கூறி பொள்ளாச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்த வழக்கில், அதன் உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 19 கோடி ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் குருசாமி (40), கடந்த 2010-ஆம் ஆண்டில் பெருந்துறையில் ‘சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆஸ்திரேலியா நாட்டு பறவையான ஈமு கோழியை வளர்த்தால் அதன் முட்டை, இறைச்சி போன்றவை அதிக விலை போகும் எனக்கூறி விளம்பரம் செய்தனர்.

ஈமு மோசடி

கவர்ச்சிகரமான இரண்டு திட்டங்களை விளம்பரப்படுத்தி முதல் திட்டத்தில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், ஆறு ஈமு கோழி குஞ்சுகள் அளித்து, தீவனம், கொட்டகை அமைத்துக்கொடுப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. மேலும், பராமரிப்பு தொகையாக 2 ஆண்டுகளுககு மாதம் ரூ.6,000, ஆண்டு வெகுமதியாக ரூ.20 ஆயிரம் அளிக்கப்படும் என்று நம்பிக்கை கொடுக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல், இரண்டு ஆண்டுகள் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி அளிக்கப்படும் என்று ‘சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா’ விளம்பரப்படுத்தினர்.

ஈமு கோழி (ETV Bharat Tamil Nadu)

இரண்டாவது திட்டத்தில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், ஈமு கோழிக்குஞ்சுகளை நிறுவனமே வைத்து பராமரித்து, 2 ஆண்டுகளுக்கு ரூ.7,000 மாதாந்திர ஊக்கத்தொகையாக அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும், ஆண்டு வெகுமதியாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும், இரண்டு ஆண்டுகள் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி கொடுக்கப்படும் என பெருவாரியாக விளம்பரப்படுத்தினர்.

இதை நம்பி சுசி நிறுவன அலுவலகத்தின் பொள்ளாச்சி கிளை அலுவலகத்தில் 1,087 பேர் முதலீடு செய்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூபாய் 19.03 கோடி மோசடி செய்ததாக, 2012 ஆம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தீர்ப்பு

இந்த வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் சிறப்பு நீதிமன்றமான டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மோசடி செய்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மோடி செய்த தொகையான ரூ.19.03 கோடியை அபராதமாகவும் விதித்து உத்தரவிட்டது.

தமிழ்நாடு முழுவதும் ‘சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா’ நிறுவனம் மீது 10 மோசடி வழக்கு உள்ள நிலையில், கோவை டான்பிட் நீதிமன்றத்தில் 6 வழக்குகளும், மதுரை டான்பிட் நீதிமன்றத்தில் 4 வழக்குகளும் உள்ளது. கோவையில் நடந்த வழக்குகளில் ஏற்கனவே 3 வழக்குகளில் தீர்ப்பு கூறப்பட்டுள்ள நிலையில், இன்று நான்காவதாகப் பதியப்பட்ட வழக்கிற்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

ABOUT THE AUTHOR

...view details