கோயம்புத்தூர்: மூத்த பத்திரிகையாளரும், ஈடிவி குழும நிறுவனர் ராமோஜி ராவ்(87) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல், ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வானதி சீனிவாசன் இரங்கல்:கோயம்புத்தூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரும் அகில இந்திய பாஜக மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் ராமோஜி குழுத் தலைவர் ராமோஜி ராவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஈநாடு ஊடக குழுமத்தின் தலைவர், திரைப்படத் தயாரிப்பாளர், ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியின் நிறுவனர் ராமோஜி ராவ் மறைவு செய்தியறிந்து பெரும் துயரம் அடைந்தேன்.
இதையும் படிங்க:நவீன ஊடக உலகின் பிதாமகன்.. ராமோஜி ராவ் கடந்து வந்த பாதை!
ராமோஜி ராவ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைப்படத்துறையினர், ஊடகத்துறையினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைத்துறை, தொழில் துறை, ஊடகத்துறைகளில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் ராமோஜி ராவ்.
அதற்கு உதாரணமாக நம் கண் முன்னே நிற்கிறது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி. தனது தாய் மொழியான தெலுங்கு மட்டுமல்லாது மற்ற இந்திய மொழிகளிலும் தொலைக்காட்சி சேனல்கள், இணையதளங்களை நடத்தி நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் வலு சேர்த்தவர். எப்போதும் தேசியத்தின் பக்கம் நின்றவர்.
2016-ஆம் ஆண்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் உயரிய, 'பத்ம விபூஷன்' விருது வழங்கி கௌரவித்தது. அவரது மறைவு ஊடகத் துறை, தொழில் துறை, திரைத்துறைக்கு பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
இதையும் படிங்க:சினிமா, மீடியா உலகின் ஜாம்பவான் ராமோஜி ராவ்.. கலையுலக வித்தகராக உருவான வரலாறு!