கோயம்புத்தூர்: போலீசார் 'போதையில்லா கோவை’யை உருவாக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், சில தினங்களாகவே கோயம்புத்தூர் மாநகர போலீசார் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி கோவை குனியமுத்தூர் மற்றும் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் தனியாக அறை எடுத்துத் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தங்கி இருக்கும் மாணவர்களுள் சிலர் கஞ்சா செடி வளர்த்து வருவதாகக் கோவை மாநகர போலீசாருக்கு புகார் வந்த நிலையில் போலீசார் அந்த பகுதியில் தொடர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று குனியமுத்தூர், புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனி அறை எடுத்துத் தங்கி இருக்கும் மாணவர்கள் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதில் குனியமுத்தூர் பகுதியில் தனி அறை எடுத்து தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் அறை ஒன்றில் போலீசார் சோதனையிட்ட போது அந்த அறையில் 24 கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததைக் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் 24 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அறையில் கஞ்சா வளர்த்து வந்த கல்லூரி மாணவர்களான விஷ்ணு, அனிருத், தனுஷ், அபிநவ் கிருஷ்ணா மற்றும் கலைவாணன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்களில் கலைவாணனைத் தவிர மற்ற நான்கு பேரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.