கோயம்புத்தூர்: மருதமலை வனப்பகுதியில் கடந்த மே 30ஆம் தேதி உடல் நலம் பாதித்த நிலையில் தரையில் படுத்து கிடந்த 40 வயது பெண் யானைக்கு, 5 நாட்களாக வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். அந்த பெண் யானையுடன் இருந்த 3 மாத ஆண் குட்டி யானை, ஜூன் 1-ம் தேதி மற்றொரு யானைக் கூட்டத்துடன் இணைந்து வனப்பகுதிக்குள் சென்றது.
பின்னர், உடல் நலம் தேறிய தாய் யானை, கடந்த ஜூன் 3ஆம் தேதி வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக, ஆனைமலை டாப்சிலிப் கோழிகமுதி யானைகள் முகாமில் இருந்து அனுபவம் வாய்ந்த பாகன்கள், காவடி உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு, குட்டி யானையை சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மேலும், தாய் யானை குட்டியை ஏற்காத நிலையில், மற்றொரு யானைக் கூட்டத்துடன் குட்டியை சேர்க்க வனத்துறையினர் முயற்சித்தனர். இந்நிலையில், மருதமலை வனப்பகுதியில் மற்றொரு யானைக் கூட்டத்துடன் குட்டியை சேர்க்க வனத்துறையினர் சனிக்கிழமை காலை முதல் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.