கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோயம்புத்தூர் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், சாய்பாபா காலனி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கிருந்த இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் பேசிய அவர், "இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் எனக்கு மக்களாகிய உங்களை நம்பித்தான் வாய்ப்பு அளித்துள்ளனர். திமுக இவர்களின் பாதுகாவலர், அவர்களின் பாதுகாவலர் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால், அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.
அதிமுக மக்களுக்கான இயக்கம். கரானா காலத்தில் எந்தவித கட்சி பேதமும் பாராமல், அனைவருக்கும் உதவிய இயக்கம் அதிமுக தான். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழியில் சாதி, மத பேதமின்றி எல்லோரும் எல்லாம் பெற வேண்டும், இல்லாமை என்கின்ற நிலை வேண்டும் என்று உழைக்கின்ற இயக்கம் அதிமுக.
மேலும், நோன்பு கஞ்சிக்கு வழங்கப்படக்கூடிய அரிசியைக் கொடுத்து உதவியது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். அதனை மேலும் உயர்த்தி வழங்கியது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். சிறு வயதிலிருந்தே அனைவரும் மனித நேயத்துடன் தான் பழகி வருகிறோம்.
ரம்ஜானுக்கு இஸ்லாமியர்கள் பிரியாணி கொடுப்பார்கள், கிறிஸ்துமசுக்கு கிறிஸ்தவர்கள் கேக் கொடுப்பார்கள், தீபாவளிக்கு இந்துக்கள் இனிப்புகள் கொடுப்பார்கள், தமிழர் திருநாளான பொங்கலை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம். அப்படிப்பட்ட நாடு தமிழ்நாடு. அப்படிப்பட்ட ஊர் கோயம்புத்தூர்.