திருப்பூர்:மங்கலம் வக்பு வாரிய நில பிரச்சனை தீர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என அதிமுக வேட்பாளர் சிங்கை.ஜி.ராமச்சந்திரனுக்கு ஆதரவாகத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் இன்று (ஏப்.07) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில், கோவை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சிங்கை.ஜி.ராமச்சந்திரன் இன்று (ஏப்.07) சிறுபான்மையின இஸ்லாமிய மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் அவருக்கு ஆதரவளிக்கும் வகையில், அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது கூடியிருந்த மக்களிடம் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசுகையில், “மங்கலம் பகுதியில் இஸ்லாமியர்களுக்கு வக்பு வாரிய நில பிரச்சினை குறித்து ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னிடம் கோரிக்கையைச் சொல்லி உள்ளார்கள். சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு பிரச்சனையாகக் கொண்டு வந்து பேசி உள்ளோம்.
இந்த பிரச்சனையில் நிச்சயமாக உங்கள் பக்கம் நிற்போம், மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி வரும்போது இந்த பிரச்சனை நிச்சயம் தீர்த்து வைக்கப்படும், நீங்கள் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்”, என்று பேசினார்.
அவரை தொடர்ந்து கோவை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை.ஜி.ராமச்சந்திரன் பேசுகையில், “இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள், யார் பிரதமராக வந்தாலும் மக்களுக்காக நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். தமிழகத்திற்கு மத்தியிலிருந்து வரவேண்டிய அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவேன்.
திமுகவைப் போன்று பொய் கூற மாட்டேன், தற்போது மின் கட்டணம், வீட்டு வாடகை உயர்வு, பெட்ரோல், கேஸ் போன்று பல்வேறு பிரச்சனைகளில் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாக என்னிடம் தெரிவிக்கின்றனர். திமுக பொய்யான வாக்குறுதி மட்டுமே கூறுகிறது. கல்விக் கடன் ரத்து செய்யவில்லை, மகளிர் உரிமைத் தொகை 30 மாதங்களுக்குப் பிறகு குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது, அதேபோன்று 10 ஆண்டுக் காலம் மோடி பிரதமராக இருந்தார், 10 பைசாவுக்கு கூட பிரயோஜனப்படவில்லை.
தமிழகத்திற்கு பாஜக ஒன்றும் செய்யவில்லை, தமிழகத்திற்குள் பாஜக நுழையவே முடியாது. அதேபோன்று திமுக கேலோ இந்தியா என்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்து பிரதமரை அழைத்து மக்களிடம் உரையாற்ற வைத்தது திமுக. திமுக சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு என்று மட்டும் கூறும், ஆனால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காலத்திலிருந்து ரமலான் நோன்புக்கு அரிசி வழங்கியது அதிமுக.
ஹஜ் பயணத்திற்குத் தங்கும் விடுதி திட்டம் தீட்டியது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாகூர் தர்காவில் பல்வேறு கட்டடங்கள் அமைத்துத் தந்தது, சந்தனக் கட்டைகள் கொடுத்தது என அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி தந்துள்ளார். எனவே உங்களில் ஒருவனாக நான் இருப்பேன் எந்த பிரச்சினை வந்தாலும் எப்போது வேண்டுமானாலும் என்னை நீங்கள் தொடர்பு கொள்ளலாம், உங்கள் வாக்கை எனக்கு அளியுங்கள்”, என பேசியுள்ளார்.
இந்த பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம் ஆனந்தன், செ.ம.வேலுச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், உட்பட எஸ்டிபிஐ, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: "அண்ணாமலை கோவை தொகுதியில் வெற்றி பெறப் போவதில்லை; மீண்டும் கர்நாடகாவுக்குச் செல்ல இருக்கிறார்" - நடிகை காயத்ரி ரகுராம்! - Lok Sabha Election 2024