தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விளையாட்டில் சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை' - வாழ்த்தி வழங்கிய மு.க.ஸ்டாலின் - MK STALIN

தமிழ்நாட்டைச் சார்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின்கீழ் பணி நியமன ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் (Credits - TN DIPR)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2024, 3:31 PM IST

சென்னை:சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 84 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு 3 % விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமன ஆணைகள் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலமாக பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில், அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

சர்வதேச போட்டிகளான ஒலிம்பிக், ஆசிய போட்டிகள், காமன்வெல்த், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்தும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், தெற்கு ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு போட்டிகள், பாராலிம்பிக், ஆசிய பாரா போட்டிகள், (மாற்றுத்திறனாளி வீரர்கள் உட்பட) தேசியளவிலான போட்டிகள்.

சாதனை அடிப்படையில் வேலை அறிவிப்பு:

மேலும், ஒலிம்பிக், ஆசிய போட்டிகள், காமென்வெல்த் போட்டிகளின் பட்டியலில் உள்ள விளையாட்டுகளில் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்தும் தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் மாநில சீனியர் சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் 2024-2025ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், முதலமைச்சர் 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், நடப்பாண்டில் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப்பணியிடங்களில் அவர்களது சாதனைகள் மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க:"மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதியா?" - அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி!

பணி நியமன ஆணை:

முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் பணி நியமன ஆணை பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் (Credits - TN DIPR)

அந்த வகையில், முதற்கட்டமாக, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை, தொழில் துறை, எரிசக்தித் துறை, கூட்டுறவுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற 14 அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், உதவியாளர், இளநிலை வரைவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களில் இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை இன்று வழங்கி, வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details