சென்னை: சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப்பரம்பரைச் சட்டத்தினால் (Criminal Tribes Act) பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்பு என வகைப்படுத்தப்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்த்து 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. கருணாநிதி தலைமையிலான அரசால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 29.7.2008-இல் அரசாணை (நிலை) எண்.85-இல் தமிழ்நாடு சட்டம் 45/1994-இன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டு, சீர்மரபினர் வகுப்பினர் என சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
பின்னர், அரசாணை (நிலை) எண்.26, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 8.3.2019-இல் வெளியிடப்பட்ட ஆணையில், மாநில அரசின் இடஒதுக்கீடு (20 சதவீதம்) மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (DNC) என அழைக்கப்படுவர் எனவும், மத்திய அரசின் நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (DNT) என அழைக்கப்படுவர் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.