தூத்துக்குடி:தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி விமான நிலையத்திகு வந்தார்.
விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி சிப்காட்டில், வின்பாஸ்ட் நிறுவனத்தின் கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியபின், அங்கிருந்து புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் பகுதியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழையால் வீடுகளை இழந்தவர்கள், சேதமடைந்தவர்கள், மீன்பிடி படகுகள் சேதமடைந்தவர்கள் என வெள்ளத் தொகுப்புகளை பார்வையிட்டு, மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர், ஸ்டாலின் பேசுகையில், “திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின், நலத்திட்ட உதவிகளை லட்சக்கணக்கில் வழங்கியுள்ளோம். 2024ஆம் ஆண்டு தொடங்கிய பின், முதல் நலத்திட்டத்தை தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
இவர் தமிழகத்திற்கு மட்டும் குரல் கொடுப்பவர் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் குரல் கொடுப்பவர். பின், தூத்துக்குடி மாவட்ட பெண் சிங்கமாக விளங்கக்கூடிய கீதா ஜீவன் மழை வெள்ள பாதிப்பின்போது மக்களோடு மக்களாக இருந்து காப்பற்றினார். மேலும், பல்வேறு அமைச்சர்கள் களத்தில் இறங்கி வேலை பார்த்தனர். அப்போது அணைக்கட்டுகள், வாய்க்கால், குளங்கள் ஆகியவற்றில் உடைப்பு ஏற்பட்ட நிலையில், 66 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பில் போர்க்கால அடிப்படையில் பணி செய்யப்பட்டது.
கரோனா காலகட்டத்தில் ஒன்றிணைவோம் வா எனக் கூறி, மக்களுக்கு பல்வேறு பொருட்கள் அளித்தோம். குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கினோம். மக்கள் துயர் தீர்க்கத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் திராவிட மாடல் அரசு. தூத்துக்குடி, திருநெல்வேலியில் உள்ள பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் 58 நபர் வீதம் 5 லட்சம் ரூபாய், கோழி, ஆடு, மாடு உரிமையாளர்களுக்கு 34 கோடியே 74 லட்சமும், வீடு பாதிப்பு அடைந்தவருக்கு 6,000 வீதம் 382 கோடியே 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது.