சென்னை:தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் சகுந்தலா. ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்து, அதன்பிறகு சினிமாவில் அறிமுகமானவர். அப்போது பிரபலமாக இருந்த லலிதா, பத்மினி, ராகினி உள்ளிட்டோர் நடத்தி வந்த நடன நாடகங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடுவதுதான் அவரது வழக்கம். துள்ளலான அவரது நடனத்தோடு கூடிய முகபாவனைகள் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சிஐடி சகுந்தலா:சேலத்தைச் சேர்ந்த இவர், புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியான சிஐடி சங்கர் படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்து அறிமுகமானார். அன்றிலிருந்து சிஐடி சகுந்தலா என அழைக்கப்பட்டார். டான்சராக பல படங்களில் நடித்து, பின்னர் குணச்சித்திரம், கதாநாயகி என படிப்படியாக உயர்ந்தார்.
சிவாஜி கணேசன் உடன் தில்லானா மோகனாம்பாள், பாரத விலாஸ், வசந்த மாளிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், எம்ஜிஆர் உடனும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவரது பாடல்கள் அந்த காலத்தில் மிகவும் பிரபலமானவை. நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.