திருச்சி: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. விடிய விடிய நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகள் செய்துள்ளனர்.
இயேசு பிரான் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனை ஆகியவை நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளில் குடில் அமைத்தும், வண்ண விலக்குகளால் அலங்கறித்தும், கிறிஸ்து பிறப்பை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் குடில் (ETV Bharat Tamil Nadu) சிறப்பு திருப்பலிகள்:
அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, திருச்சியில் மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயம், உலக மீட்பர் பசிலிக்கா, குழந்தை இயேசு திருத்தலம், புனித அந்தோணியார் ஆலயம், புனித சூசையப்பர் ஆலயம், புனித லூர்து அன்னை ஆலயம் உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்துவ ஆலயங்களில் நேற்று (டிசம்பர் 24) செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு திருப்பலிகள் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.
அதில், மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயத்தில் திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் தலைமையில் திருப்பலி நடைப்பெற்றது. இதில், இயேசு கிறிஸ்து குழந்தையாக பிறந்ததை வெளிப்படுத்தும் விதமாக, குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் ஏந்தி இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு, நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் குடும்பமாக வருகை தந்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் சொல்லி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தூய மரியன்னை பேராலய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னையில் 8,000 காவலர்கள் பாதுகாப்பு..!
அதுமட்டுமின்றி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மாநகர் பகுதிகளில் சாலைகள், வீதிகள் மற்றும் தேவாலயங்கள் முழுவதுமாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. இது குறித்து கிறிஸ்துமஸ் பண்டிகையில் கலந்துக்கொண்ட ஜெனிபர் என்பவர் கூறுகையில், “அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். வருகிற 2025 அனைவருக்கும் சிறப்பாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது” என்றார்.
அதைத் தொடர்ந்து அமலா எனபவர் கூறுகையில், “ஏராளமான மக்கள் வருகை புரிந்துள்ளனர். அனைவரது பிரார்த்தனைகளும் நிறைவேற வேண்டும். உலக பாதுக்காப்பு வேண்டியும், குழந்தைகள் நலன் கருதியும் பிரார்த்தனைகள் வெகு சிறப்பாக செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்,