புதுக்கோட்டை:வடகிழக்கு பருவமழை ஆரம்பமாக உள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய அடை மழையால் புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளின் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதில், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளின் உள்ளே மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், பொதுமக்கள் இரவு முழுவதும் மழையில் நனைந்தவாரு உணவின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கைக்குழந்தையுடன் ஆட்டோவில் சிக்கிய தாய் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu) மேலும், இதனால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்கு 2ம் வீதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கைக்குழந்தையுடன் தாய் மற்றும் குடும்பத்தினர் ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற ஆட்டோ வெள்ள நீரில் அடித்துச் சென்றுள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மழை நீரில் சிக்கிய ஆட்டோவில் இருந்த கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினரை காப்பாற்றியுள்ளனர்.
துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவை மீட்டு, கைக்குழந்தை மற்றும் தாயை மீட்ட இளைஞர்களின் செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி? ஒரு வாரம் தமிழ்நாட்டுக்கு கனமழை எச்சரிக்கை!
மேலும், உசிலங்குளம் உள்ளிட்ட பகுதிகளின் குடியிருப்புகளிலும், சாலைகளிலும் மழை நீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் என்ன செய்வது தெரியாமல் தவித்து வந்தனர். ஒரு மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழையால் புதுக்கோட்டையை தண்ணீரில் மிதக்கக்கூடிய நிலையில் கொட்டும் மழையிலும் புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா வருகை தந்து மழை நீர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய நிலையில், வரத்து கால்வாயை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் மழை நீர் சூழ்ந்து சேதம் அடைந்த வீடுகளுக்கும், மழையால் சுவர் இடிந்து சேதம் அடைந்த வீடுகளுக்கும் தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.