தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை! - NorthEast Monsoon

வடக்கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

தலைமைச் செயலாளருடன் ஆலோசனைக்கூட்டம்
தலைமைச் செயலாளருடன் ஆலோசனைக்கூட்டம் (Credits - TN DIPR X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 10:48 PM IST

சென்னை : சென்னை, தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் காணொளி வாயிலாக பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பருவமழையின் சவால்களையும், திறம்பட எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள பேரிடர் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பருவமழைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு துறைகளின் செயலாளர்கள், துறை தலைவர்கள், வடகிழக்குப் பருவமழையினை திறம்பட எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைத்தனர். சென்னை பெருநகர காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதையும் படிங்க :வடிகால் கட்டுமானப் பணியில் தொய்வு..பருவமழைக்கு தாங்குமா சென்னை? துணை மேயர் சொல்வதென்ன?

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், மண்டல அளவிலான பல்துறை ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு அலுவலர்களுக்குமான பேரிடர் மேலாண்மை பணிகள் வரையறுக்கப்பட வேண்டும். குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பேரிடர் ஆயத்தம் குறித்த கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

சென்னை வடிநில பகுதியில் நெடுஞ்சாலை, நீர்வளத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, மெட்ரோ ரயில் ஆகிய துறைகளின் மூலம் நடைபெற்று வரும் பணிகளின் தரம், முன்னேற்றம் குறித்து மாவட்ட மற்றும் மண்டல கண்காணிப்பாளர்களைக் கொண்டு கள ஆய்வு செய்ய வேண்டும். பேரிடர் மீட்பு உபகரணங்கள், வாகனங்கள், நீர் இறைப்பான்கள், படகுகள், பருவமழை தொடங்கும் முன்னரே பாதிப்புகளுக்குள்ளாகும் தாழ்வான பகுதிகளில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

பருவமழை தொடங்கும் முன்னரே மாநிலத்தின் அதிக பாதிப்புகளுக்குள்ளாகும் பகுதிகளில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வானிலை வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்களின் முன்னெச்சரிக்கைகளின் அடிப்படையில், பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையிலான, பகுதிவாரியான வானிலை தகவல்கள் வழங்க நடடிவக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை தலைமைச்செயலாளர் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், துறை சார்ந்த செயலாளர்கள், காவல்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details