தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காமராஜர் பிறந்தநாள்; அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் துவக்கம்! - CM Breakfast Scheme - CM BREAKFAST SCHEME

CM Breakfast Scheme In aided schools: அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் வருகிற 15ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளிலிருந்து காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 4:08 PM IST

Updated : Jul 5, 2024, 4:17 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 3 ஆயிரத்து 996 அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை, வருகிற 15ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள், காலையில் உணவு உட்கொள்ளாமல் வருவதால் சரியாக பாடத்தை கற்க முடியாமல் சிரமப்படுவதாக கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' 2022ஆம் ஆண்டு அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இந்தத் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகை அதிகரித்ததுடன், அவர்களின் ஊட்டச்சத்தும், ஆரோக்கியம் மற்றும் கற்றல் திறனும் மேம்பட்டதாக ஆய்வுகள் தெரிவித்தன.

மேலும், அண்டை மாநிலமான தெலங்கானாவிலும், கனடா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைபெற்று வரும் இந்த திட்டம், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள 3996 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 2 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்களுக்கு, காலை உணவு திட்ட விரிவாக்கத்தை, மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய காமராஜர் பிறந்த நாளான வரும் 15-ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் என 16 லட்சத்திற்கும மேற்பட்ட மாணவர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: "பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்" - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ!

Last Updated : Jul 5, 2024, 4:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details