தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலை பல்கலை. போலி சான்றிதழ் தயாரித்த விவகாரம்: மேலும் 4 பேரைக் கைது செய்த சிபிசிஐடி போலீசார்! - FAKE CERTIFICATE PRINT ISSUE

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக போலி கல்விச் சான்றிதழ் தயாரித்த விவகாரத்தில் முக்கிய ஏஜெண்டு உள்பட 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கைது தொடர்பான கோப்புப்படம்
கைது தொடர்பான கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2025, 1:04 PM IST

கடலூர்:கடலூர் மாவட்டம் சிதம்பரம், கோவிலாம்பூண்டி கிராமத்தில் உள்ள வாய்க்கால் பாலம் பகுதியில் உள்ள முட்புதர் ஒன்றில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழக கல்விச் சான்றிதழ்கள் சிதறி கிடந்தன.

இதை கைப்பற்றி ஆய்வு செய்த பல்கலைக்கழக அதிகாரிகள், அவை அனைத்தும் போலி சான்றிதழ்கள் என்று கண்டறிந்தனர். இதையடுத்து, இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சான்றிதழ்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலி சான்றிதழ்கள் தயாரிப்பு:

அந்த விசாரணையில், சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த சங்கர், சிதம்பரம் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த நாகப்பன் மற்றும் அருட்பிரகாசம் ஆகிய 3 பேரும் போலி சான்றிதழ்கள் தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களது வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில், அங்கிருந்து ஏராளமான போலி சான்றிதழ்கள், பெயர் எழுதப்படாத போலி சான்றிதழ்கள், அதை தயாரிக்க பயன்படுத்திய லேப்டாப், பிரிண்டர், போலி முத்திரை, போலி அடையாள அட்டைகள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் (ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இவர்கள் மூன்று பேரும் தமிழகம் முழுவதும் பல்வேறு போலி கல்விச் சான்றிதழ்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

சிபிசிஐடி போலீசார் விசாரணை:

இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து கடலூர் சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி, சித்த மருத்துவம் படித்த 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி கல்விச் சான்றிதழ் வினியோகம் செய்த திருச்சியை சேர்ந்த அகில இந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் சுப்பையா பாண்டியன் என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், முக்கிய ஏஜெண்டாக சிதம்பரத்தில் வசித்து வந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கெளதம் (எ) ஆஸ்டின் ராஜா செயல்பட்டது தெரிந்தது. இது தவிர தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள், போலி சான்றிதழ்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதற்கிடையே, கல்விச் சான்றிதழ் பெற்ற 1000 பேருக்கும் சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தினர். அதில் ஏஜெண்டுகளையும் அடையாளம் கண்டு வந்தனர். அதில் ஆஸ்டின் ராஜா புதுச்சேரி சத்யாநகர் காமராஜர் சாலையில் வீடு எடுத்து தங்கி இருந்தது தெரிந்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் அங்கு சென்று அவரை தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை.

கைது செய்த சிபிசிஐடி போலீசார்:

இந்த நிலையில் ஆஸ்டின் ராஜா அவரது கூட்டாளிகள் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிபிசிஐடி போலீசார் பெங்களூருக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்குள்ள தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த ஆஸ்டின் ராஜா (51), அவரது தம்பி நெல்சன் (48), சிதம்பரம் எம்.கே. தோட்டத்தை சேர்ந்த தமிழ்மாறன் (53), திட்டக்குடி ராசு தங்கதுரை (41) ஆகிய 4 பேரையும் போலீசார் பிடித்து, கடலூருக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெளி வந்த உண்மைகள்:

அந்த விசாரணையில், ஆஸ்டின் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள பிஏ., பிஎஸ்சி., பிகாம்., பிஎச்டி. உள்ளிட்ட பல்வேறு கல்விச் சான்றிதழ்களை போலியாக தயாரித்து, ரூ.7 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இது தவிர சென்னையில் உள்ள சித்தா கல்லூரியில் உள்ள சித்தா, யோகா, ஓமியோபதி, யுனானி கல்விச் சான்றிதழ்களையும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விற்பனை செய்தது தெரிய வந்தது.

மேலும் இவர்கள் பல்வேறு பல்கலைக்கழக சான்றிதழ்களையும் போலியாக தயாரித்து விற்பனை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அது மட்டுமின்றி இந்த கல்விச் சான்றிதழ்கள் கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், புதுச்சேரி மாநிலங்களிலும் பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து பல கோடி ரூபாய் சம்பாதித்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில், போலீசார் தேடுவதை அறிந்ததும் ஆஸ்டின் ராஜா தம்பி நெல்சன், போலி சான்றிதழ்கள், கணினி உள்ளிட்ட ஆவணங்களை மறைப்பதற்காக அவற்றை தீ வைத்து எரித்து, தடயங்களை மறைத்துள்ளார். மேலும் தமிழ்மாறன் வங்கி கணக்கில் தான் பெருமளவு பணத்தை ஆஸ்டின் ராஜா வாங்கி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, தங்கதுரை வேப்பூரில் வைத்திருக்கும் கணினி மையத்திலும், கல்விச் சான்றிதழ்களை மறைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதை கண்டறிந்த போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அப்போது, அவர்களிடம் இருந்து 15 செல்போன்கள், 8 சிம்கார்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:வாணியம்பாடியில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடிய தம்பதி; பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைப்பு!

பின், நெல்சனுக்கு சொந்தமான காரையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிதம்பரம் கொத்தங்குடியை சேர்ந்த அசோக்குமார் (45) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நேற்று (பிப்.19) இரவு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details