தமிழ்நாடு

tamil nadu

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் விமான நிலையத்தில் சிக்கியது எப்படி? - Ration rice smuggling youth arrest

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 10:21 AM IST

Ration rice smuggling youth arrest: ரேஷன் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கடத்தல் வழக்கில் சென்னை சிவில் சப்ளை குற்றப்பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த இளைஞர், மலேசிய நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Kumar mohammed khalid photo
சென்னையில் கைது செய்யப்பட்ட குமார் முகமது கலித் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னையைச் சேர்ந்தவர் குமார் முகமது கலித் (29). இவர் மீது ரேஷன் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கடத்தி பதுக்குதல் வழக்குகள், சிவில் சப்ளை குற்றப்பிரிவு சிஐடி போலீசில் உள்ளது. இதனையடுத்து, சிவில் சப்ளை குற்றப்பிரிவு போலீசார், குமார் முகமது கலித்தை கைது செய்து விசாரணை நடத்துவதற்காக தேடி வந்துள்ளனர். ஆனால், இவர் கடந்த மூன்று மாதங்களாக, போலீசாரிடம் சிக்காமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

அதோடு இவர் வெளிநாட்டிற்கு தப்பியோட திட்டம் போட்டதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சென்னை சிவில் சப்ளை குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு குமார் முகமது கலித்தை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு, குமார் முகமது கலித் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதை தடுக்கும் விதத்தில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி (LOC) போடப்பட்டது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து, விமானத்திற்கு அனுப்பி கொண்டு இருந்தனர். இந்த விமானத்தில் மலேசியா நாட்டிற்கு தப்பிச் செல்வதற்காக, குமார் முகமது கலித் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் ஆய்வு செய்தபோது, இவர் சிவில் சப்ளை குற்றப்பிரிவு போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து குடியுரிமை அதிகாரிகள், குமார் முகமது கலித் பயணத்தை ரத்து செய்து, அவரை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்துவிட்டு, சிவில் சப்ளை குற்றப்பிரிவு சூப்பிரண்டுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சிவில் சப்ளை குற்றப்பரிவு போலீசார் நேற்று (மே 10) அதிகாலை, சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு வந்து, குமார் முகமது கலித்தை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் 78 பேர் பணியிட மாற்றம் - சென்னை ஐக்கோர்ட் பதிவாளர் உத்தரவு! - Judges Transfer In TN

ABOUT THE AUTHOR

...view details